இந்தியாவில் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்துவதற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு  விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு  திட்டமிட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகமும் இனிவரும் காலங்களில் அடிக்கடி பேரழிவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு நாட்டின் வளர்ச்சி ஆக்கப்பூர்வமானதாக இருக்க வேண்டும்; பொருளாதாரத்தை வளர்ப்பதாகக் கூறிக் கொண்டு சுற்றுச்சூழலை சீரழித்து விடக் கூடாது என்பதற்காகத் தான் தொழில்திட்டங்களுக்கும், கட்டுமானத் திட்டங்களுக்கும் அனுமதி அளிப்பதற்கு முன், அவற்றால் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை அறிய, அது குறித்த சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகள் தயாரிக்கப் படுகின்றன. அவற்றின் அடிப்படையில் தான் திட்ட அனுமதிகள் வழங்கப்படுகின்றன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான இந்த ஏற்பாடுகள் 1972&ஆம் ஆண்டு ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் ஐ.நா. நடத்திய சுற்றுச்சூழல் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும், அதில் கடந்த 48 ஆண்டுகளில் அவ்வப்போது செய்யப்பட்ட மேம்பாடுகள் காரணமாகவும் செய்யப்பட்டவை ஆகும். இந்தியாவில் சுற்றுச் சூழல் ஓரளவாவது பாதுகாக்கப்படுகிறது  என்றால் அதற்கு இந்த ஏற்பாடு தான் முக்கியக் காரணமாகும்.


முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை தளர்த்த திட்டமிட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், அதற்கான வரைவு அறிவிக்கையை மக்களின் கருத்துகளை கேட்டறியும் நோக்கத்துடன் கடந்த மார்ச் 12&ஆம் தேதி அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மே மாதம் 10&ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்த எந்த தேவையும் இல்லாத நிலையில், அதில் திருத்தங்களை செய்வதும்,  ஒட்டுமொத்த நாடும் கொரோனா அச்சத்தில் உறைந்திருக்கும் வேளையில் அதுகுறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதும் நியாயமானவை அல்ல. இந்த யோசனைகளை அனைத்தும் கைவிடப்பட வேண்டும்.


சில கட்டுமானத் திட்டங்கள் குறித்து அது செயல்படுத்தப்படும் பகுதிகளில் வாழும் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவையில்லை; அனுமதியின்றியோ, விதிகளை மீறியோ நிறைவேற்றப் பட்ட திட்டங்களுக்கு அபராதம் விதித்து வரன்முறை அளித்தல்; நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளித்தல் ஆகிய 3 அம்சங்கள் தான்  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களில் மிகவும் முக்கியமானவையாகும். இந்த மூன்று திருத்தங்களுமே மிகவும் ஆபத்தானவை; அழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.


தொழில்திட்டங்களோ, வேறு திட்டங்களோ ஓர் இடத்தில் செயல்படுத்தப்படும் பட்சத்தில் அதனால் அங்கு வாழும் மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது; அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால் அது அவர்களின் வாழும் உரிமையை பறிக்கும் செயலாக அமையும். அதனால் தான் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாக அது குறித்து அங்கு வாழும் மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்; பொதுமக்கள் நியாயமான எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டத்தையே கைவிட  வேண்டும் என்பது தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களின் அடிப்படை ஆகும். அதற்கு மாறாக, கருத்துக் கேட்புக்கூட்டத்தை நடத்தத் தேவையில்லை என்பது பொதுமக்கள் மீது சுற்றுச்சூழல் சீரழிவை திணிக்கும் செயல் ஆகும். இது ஐ.நா. விதிகள் மற்றும் மனித உரிமைகளை மீறும் செயல் ஆகும்.


அனுமதியின்றியோ, விதிகளை மீறியோ நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு அபராதம் விதித்து வரன்முறை அளிப்பது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்தி விடக்கூடும். தமிழகத்தின் நீர்வள உரிமைகளை பறிக்கக்கூடிய மேகதாது அணை, முல்லைப்பெரியாறு புதிய அணை ஆகியவற்றை கட்ட முறையே கர்நாடகமும், கேரளமும் துடித்துக் கொண்டு இருந்தால் கூட, அவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால் தான் அவற்றை செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசின் புதிய விதிகள் செயல்பாட்டுக்கு வந்தால், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலேயே கர்நாடகம் மேகதாது அணையையும், கேரளம்  முல்லைப் பெரியாறு அணையையும் கட்டி, பயன்பாட்டுக்கு வந்த பிறகு வரன்முறை வழங்குமாறு கோரக்கூடும்.  


சென்னையில் விதிகளை மீறி அடுக்குமாடி வணிகக் கட்டிடங்கள் கட்டப்படுவதும், ஒரு கட்டத்துக்கு மேல் ஆட்சியாளர்களின் தயவில் அந்தக் கட்டிடங்களுக்கு வரன்முறை அளிப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய செயல்களால் சென்னை வாழத்தகுதியற்ற மாநகரமாகி விட்டது என்று கண்டித்ததுடன், விதிமீறல் கட்டிடங்களுக்கு வரன்முறை அளிக்கக்கூடாது என்றும் தீர்ப்பளித்தது. மத்திய அரசு இதுபோன்ற திருத்தங்களைக் கொண்டு வந்தால், அதற்கும் உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.


அதேபோல், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட திட்டங்கள் என்றால் என்ன? என்பதற்கு எந்தவிதமான வரையரையும் அளிக்காமல் அவற்றுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்க நினைப்பதும்  முறையல்ல. இந்த சலுகை தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும். பெரிய அளவிலான திட்டங்களைச் செயல்படுத்தும் போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்வது தான் மிக மிக அடிப்படையான அம்சம் ஆகும். சுமார் 10,000 உழவர்களை பாதிக்கக்கூடிய சென்னை & சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு முயன்ற போது, அதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டித் தான் அந்த திட்டத்திற்கு உயர்நீதிமன்றத்தில் தடை பெறப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டால் விவசாயிகளையும், மக்களையும் பாதிக்கக் கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாமலேயே போய்விடும். அது மக்களுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும்.


கொரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று  நோய்கள் ஏற்படுவதற்கு காரணமே சுற்றுச்சூழல் சீர்கேட்டால் ஏற்படும் பருவநிலை மாற்றம் தான். மத்திய அரசின் புதிய திட்டங்களுக்கு செயல்வடிவம் தரப்பட்டால் இந்தியாவின் சுற்றுச்சூழல் மிக மோசமாக சீரழியும்; அது பேரழிவுகளுக்கு வழி வகுக்கும். எனவே, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கான விதிகளை தளர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.