சுங்கச்சாவடியில் நடந்த மோதல்... காயமடைந்த ஊழியர்கள்... போலீசார் விசாரணை..!!
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில், சுங்க வரி வசூல் மையத்தில், காரில் வந்தவர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் டி.டி.பி.எல் என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சுங்க வரி வசூல் செய்யும் சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க வரி வசூல் மையத்தில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி மார்க்கம் நோக்கி திமுக கொடியுடன் வந்த TN 14 AH 5 என்ற பதிவு எண் கொண்ட இனோவா கார் சுங்கச் சாவடியை கடக்க முற்பட்டுள்ளது.
இந்நிலையில் காரின் முன் கண்ணாடியில் ஓட்டப்பட்டிருந்த fastag ஸ்டிக்கரை ஸ்கேன் செய்த சென்சார் கருவி பணம் (லோ பேலன்ஸ்) இல்லாததால் தடுப்பை திறக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து சுங்க வரி (Toll Tax) வசூலிக்கும் கவுண்டருக்கு வந்த ஊழியர் உங்களது பாஸ்ட் ட்ராக் பேலன்ஸ் குறைந்து விட்டது, அதனால் உங்களை அனுப்ப இயலாது சுங்கவரி செலுத்துங்கள் என கூறியுள்ளார்.
அதற்கு காரில் வந்த நபர் எனது பாஸ்ட்ராக்கில் பணம் உள்ளது. நீங்கள் எப்படி இல்லை என்று தெரிவிக்கலாம் தடுப்பை திறந்து விடுங்கள் என கூறியுள்ளார். அதற்கு பணம் இல்லாமல் எப்படி தடுப்பை திறக்க முடியும் என ஊழியர் கூற, திறக்க முடியுமா? முடியாதா? என காரில் இருந்தவர்கள் கூற இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்து காரில் இருந்தவர்கள் காரை வேகமாக இயக்கி தடுப்பை தாண்டி செல்ல முற்பட்டுள்ளனர்.
இதனைக் கண்ட சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் ஓடி வந்து அந்த காரை தனது கைகளால் தட்டியுள்ளார். கார் தட்டப்படுவதை அறிந்து காரை ஓட்டிய நபர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி வந்து சுங்கச்சாவடி ஊழியரை தாக்க, பதிலுக்கு அவர் தாக்க அதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்களும், சுங்கச்சாவடி ஊழியர்களும் ஒருவர் ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
மேலும் படிக்க | ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமா... உங்களுக்காகவே அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட்
திடீரென நிகழ்ந்த தாக்குதல் சம்பவத்தில், சுங்கச்சாவடியின் பணி மேற்பார்வையாளர் மணிகண்டன், சுங்கவரி வசூலிப்பாளர் பாண்டியன் ஆகியோர் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மனு ரசீது அளித்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட இன்னோவா காரில் வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் சம்பவத்தின் போது, காரில் வந்தவர்கள் தாங்கள் வழக்கறிஞர்கள் என்றும், மேடவாக்கம் பகுதியில் திமுக கவுன்சிலராக இருப்பதாகவும் தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளையும், இனோவா காரின் பதிவு எண்ணையும் ஆதாரமாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சுங்க வரி வசூலிப்பது தொடர்பாக, ஊழியர்களுக்கும், காரில் பயணித்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி whatsapp, facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க - ஆசை மகளின் திருமணம்....கதறி அழுத பெற்றோர்: நெகிழ வைக்கும் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ