ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டைவேடம் போடுகிறது திமுக என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தான், தமது, தமக்கு என்று இல்லாமல், தமிழ், தமிழ்நாடு, தமிழினம் என இமைப்பொழுதும் சோர்வின்றி உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அதற்கு நேர்மாறான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. தன்னலத்திற்காக மத்திய இளநிலை கல்விக் கழக அங்கீகாரம் பெற்ற பள்ளிகளைத் தொடங்குவது அல்லது அதனை விலைக்கு வாங்குவது, ஆங்கிலப் பெயர்களை வியாபார நிறுவனங்களுக்கு வைப்பது, பிற மாநிலங்களில் வியாபார நிறுவனங்களைத் தொடங்குவது என்ற வரிசையில் தற்போது முதல்வரை பிரபலப்படுத்துவதற்காக இந்தி மொழியை திமுக அரசு பயன்படுத்தி வருவதாக செய்திகள் வந்துள்ளன என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 


அண்மையில்‌, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா‌, நாடாளுமன்ற ஆட்சி மொழிக்‌ குழுத்‌ தலைவர்‌ என்ற முறையில்‌ ஆட்சிமொழிக்‌ கூட்டத்தில்‌ பேசியபோது,  'ஆங்கிலத்திற்கு‌ பதிலாக இந்தி மொழியைப்‌ பயன்படுத்துங்கள்‌' என்று கூறியதாகப் பத்திரிகைகளில்‌ செய்திகள்‌ வந்தன. இதற்கு தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசியல்‌ கட்சிகளும்‌ எதிர்ப்பு தெரிவித்தன. பிற மாநிலங்களைச்‌ சார்ந்த பல்வேறு ஆரசியல்‌ கட்சிகளும்‌ எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ்நாடு முதல்வர்‌  "இந்தியாவின்‌ ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும்‌ செயல்‌" என்று வீராவேசத்துடன்‌ விமர்சித்தார்‌. ஆனால்‌, இன்று தன்னுடைய அறிவிப்புகளை இந்தி மொழியில்‌ வெளியிடுகின்றார்‌. தன்னலம் என்றவுடன் முதல்வர் தடம் மாறுகின்றார் என்றும் அறிக்கையில் அவர் விமர்சித்துள்ளார்.


மேலும் படிக்க | நாஞ்சில் சம்பத்துக்கு கருப்பு கொடி; பாஜக, திமுக இடையே மோதல்



தமிழ்‌ மொழியை வளர்ப்பது என்பது தமிழ்நாட்டில்‌ உள்ள அனைவரையும்‌, குறிப்பாக பிறமொழி பேசுபவர்களைத் தமிழ் கற்றுக்‌கொள்ள வழிவகை செய்வது; பிற மாநிலங்களில்‌ உள்ள மக்கள்‌ தமிழ்‌ மொழியைக்‌ கற்றுக்‌கொள்ளத்‌ தேவையான வசதிகளை ஏற்படுத்திக்‌ கொடுப்பது, பிற மாநிலங்களில்‌ உள்ள பல்கலைக்கழகங்களில்‌ தமிழ்த்‌ துறையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது, தமிழுக்கான இருக்கைகளைத் தோற்றுவிப்பது, உலக நாடுகளில்‌ உள்ள பல்கலைக்கழகங்களில்‌ தமிழ்‌ இருக்கைகளைத் தோற்றுவிப்பது போன்றவை ஆகும்‌. ஆனால், தமிழ் மொழியை வளர்க்க வேண்டிய முதல்வர் அதைச் செய்யாமல், தன்னை வளர்த்துக்கொள்ளும் பணியில், தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில் இந்தி மொழியை வளர்த்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன என்று தெரிவித்துள்ளார். 


அதாவது முதல்வர் ஸ்டாலினை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவர் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் கட்டமாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தி - மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார். 


ஒரு பக்கம் இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது திமுக. தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை திமுக தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள். ஒருவேளை ஊருக்குதான் உபதேசம் போலும் என்று கிண்டல் செய்துள்ளார். 


மேலும் படிக்க | ராஜா என்றும் இளையராஜா - களம் இறங்கிய தமிழ்நாடு பாஜக



திமுக அரசின் இந்த இரட்டை வேடத்திற்கு அதிமுக சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் இந்தச் செயலைப் பார்க்கும்போது, "பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி, பாமர மக்களை வலையினில் மாட்டி, இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே" என்ற புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் பாடல் வரிகள்தான் என் நினைவிற்கு வருகின்றன. திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அதிமுக ஆட்சியில் அமர வழிவகுக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G