டாஸ்மாக்கில் ரூ. 2000 நோட்டை மாற்றும் திமுக...? பதுக்கல் குறித்து பாஜக குற்றச்சாட்டு
டாஸ்மாக் மூலம் தாங்கள் பதுக்கி வைத்து ரூ. 2000 நோட்டுகளை திமுகவினர் மாற்றிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பாஜகவின் மாநிலத் துணை தலைவர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பாஜக மேற்கு மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி. இராமலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசினார்.
அந்நிகழ்வில் இனிவரும் காலங்களில் கட்சி மேற்கொள்ளும் பணிகள், மக்கள் சந்திப்பு, மேற்கு மாவட்ட பொதுமக்களின் கோரிக்கைகள், தேவைகள் உள்ளிட்ட பொருள்கள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கூட்ட அரங்க வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. இராமலிங்கம்,"பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 65 இடங்களில் ஒரே நாளில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசப்பட்டது என்றார்.
மேலும் படிக்க | வீடுகளுக்கு நேரடியாக எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சேலத்தில் தொடக்கம்
மேலும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணம், வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி முதல், இராமேஸ்வரத்தில் இருந்து தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய தலைமை இதுகுறித்து அறிவிக்கும்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அதை மாநில தேர்தலாக மட்டுமே நாங்கள் பார்க்கின்றோம். தேர்தல் பிரச்சாரத்தின்போது தேசிய தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் அங்கு வந்து பிரச்சாரம் செய்திருந்த போதிலும், அம்மாநிலத்திற்கு ஆட்சிப் பொறுப்பிற்கு யார் வரவேண்டும் என்ற அடிப்படையில் நடந்த தேர்தலாகும். எனவே அதனை நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிட முடியாது.
வருகின்ற 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவிற்கு தலைமை ஏற்க, 'மீண்டும் வேண்டும் நமது மோடி' என்ற கோஷத்தை அடிப்படையாகக் கொண்டு பிஜேபி தனது பணிகளை முனைப்போடு தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கூறும் வகையில், இம்மாதம் 30 முதல் வரும் ஜூன் 30ஆம் தேதி வரை, கட்சியின் சார்பில் நாடு முழுவதும் அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், கலை நிகழ்ச்சிகள், மக்களை நேரடியாக அவர்களின் இருப்பிடங்களில் சென்று சந்தித்தல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம் என மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் முதலமைச்சர், மதுவிலக்கு-ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் உள்ளிட்ட திமுகவினர், டாஸ்மாக்கில் வசூலாகும் குறைந்த மதிப்புள்ள 50, 100, 200, 500 போன்ற ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்டு, தாங்கள் பதுக்கி வைத்துள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் பணக் கட்டுகளை, மாற்றிக்கொள்ளும் முயற்சியில் கடந்த இரு நாள்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
டாஸ்மாக்கில் வசூலாகும் பணத்தை எடுத்துக்கொண்டு, தாங்கள் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிக்கு 100 கோடி ரூபாய் என பதுக்கி வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டு கட்டுகளை மாற்றிக் கொள்வதாக தெரியவந்துள்ளதால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, பாஜக மாநில நிர்வாகிகள், நாமக்கல் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலரும் உடன் இருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ