சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு திமுக (DMK MLA) எம்.எல்.ஏ. கு.க.செல்வம் கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், கு.க.செல்வத்திற்கு மாவட்ட செயலாளர் பதவி அளிக்காததால் தான், அவர் பாஜக-வில் இணையப்போகிறார் எனவும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் (MK Stalins) தலைமையில், கட்சியின் மூத்த முக்கிய தலைவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஆர்எஸ் பாரதி, நேரு உள்ளிட்ட முக்கிய திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.


ஏற்கனவே திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் கு.க. செல்வம், 1997-ல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் உயிரிழந்தார். 


இதனையடுத்து, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டி ஏற்பட்டது. திமுக-வை பொறுத்தவரை கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி என்பது வலிமையானது. அதனால் தான், அந்த பதவிக்கு போட்டி ஏற்பட்டது. ஆனால் அதிகம் வெளியே தெரியாத முகமான சிற்றரசுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதனால் மூத்த நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதில் ஒருவரான கு.க.செல்வம், தற்போது திமுக-வில் இருந்து விலகி, பாஜகவில் இணைய உள்ளார்.