தமிழக பாஜக அடுத்த 2026-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு அலைகளை கொண்ட இந்த கட்சி மக்களிடையே நற்பெயர் வாங்க போராடி வருகிறது. மக்கள் பிரச்சனைகள் அனைத்திற்கும் குரல் கொடுத்து வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அதேபோல தமிழக பிரச்சனைகள் குறித்து பாஜக தேசிய தலைவர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர். பெரும்பான்மையுடன் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மற்றவர்களை நம்பி அரசியில் செய்யவில்லை: மு.க. ஸ்டாலின் உறுதி


ஆனால் தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி மட்டுமே அக்கட்சிக்கு அதுவும் அதிமுக கூட்டணி மூலம் கிடைத்தது. இதனால் 2024-ம் ஆண்டு தேர்தலில் இரட்டை இலக்க எண்ணில் மக்களவை உறுப்பினர்களை பாஜக பெற வேண்டும்  என்று திட்டம் தீட்டி வருகிறது. அதற்கான முயற்சியாக திமுக போன்ற பெரிய கட்சியில் இருந்து ஆட்களை தங்கள் கட்சிக்கு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவை பாஜகவுக்கு அழைத்து வர வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



திமுக கட்சிக்கு பலமாக இருக்கும் ஒருசில மூத்த தலைவர்களில் முக்கியமானவர் தான் திருச்சி சிவா. அவருடைய மகனை பாஜகவுக்கு இழுத்தால், அதன் மூலம் திமுகவில் பல ஆண்டுகள் இருந்தும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படாத நிர்வாகிகளையும், அதிருப்தியில் இருக்கும் மூத்த நிர்வாகிகளையும் ஸ்கெட்ச் போட்டு தூக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே அண்ணாமலை மீது பல புகார்கள் அடுக்கடுக்காக பாஜக தலைமைக்கு சென்றுள்ளதால், கட்சிக்குள் நற்பெயர் வாங்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.



மேலும் படிக்க | ஒராண்டு திமுக : ஓ.பி.எஸ் போட்ட மார்க் என்ன ?


திமுக கட்சிக்குள் வாரிசு அரசியல் உள்ளது என்பதே எதிர்கட்சிகளின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. திமுகவின் மூத்த தலைவர்கள் பலரும் அவர்களின் மகன்களுக்கு கடந்த தேர்தலில் சீட் வாங்கிக்கொடுத்து எம்.எல்.ஏ ஆக்கியுள்ளனர். ஆனால் திருச்சி சிவா, தனது மகனை கட்சிக்குள் பெரிய அளவில் வளர்த்துவிட தயாராக இல்லை என்று திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருக்கும் சூர்யா விரைவில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து என்ன நடக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.