கவுன்சிலர்களின் கணவர்களால் திமுகவுக்கு தொடரும் சிக்கல்! அடுத்தடுத்து வெளியாகும் விடியோக்கள்!
நான் தான்டா கவுன்சிலர் என்றவரிடம் இதுதான்டா போலீஸ் என காட்டிய காவல்துறை. திமுக தலைமைக்கு தொடரும் சிக்கல்!
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பல தொகுதிகள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. பெண்கள் வெற்றி பெற்ற தொகுதியில் பெரும்பாலும் அவர்களின் அப்பா, அண்ணன் அல்லது கணவன் தான் வேலைகளை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கவுன்சிலர்களுக்கான அலுவலகங்களில் வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்களுக்குப் பதில் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஆண்களே அமர்ந்துள்ளனர். அதற்கான வீடியோக்களும் வெளியாகி அவ்வப்போது பேசு பொருளாகி வருகிறது.
மேலும் படிக்க | இன்று வளைகாப்பு: நிறை மாத கர்ப்பிணி மரணம்! சந்தேகம் எழுப்பும் தந்தை! என்ன நடந்தது?
அந்த வகையில் சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட 51-வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிரஞ்சனாவில் கணவர் ஜெகதீஷன் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிரஞ்சனாவுக்கு பதில் ஜெகதீஷன் தொகுதிக்குள் வலம் வந்துள்ளார். அதோடு அங்கு கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களுக்கு சென்று தகராறு செய்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், ராயபுரத்தில் உள்ள ஜேபி கோவில் தெருவில் ஜெகதீஷன் தனது ஆதரவாளர்களுடன் நின்றிருந்த போது, அங்கு வந்த ரோந்து போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் கடுப்பான ஜெகதீஷன் அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில், நான் தான் இந்த தொகுதி கவுன்சிலர் உன்னால் என்ன செய்ய முடியும் என போலீஸாரை ஒருமையில் பேசியுள்ளார். அதோடு தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டியுள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திமுக தலைமைக்கும் செய்தி சென்றுள்ளது. இதனையடுத்து உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற சென்னை வடக்கு மாவட்ட செயலாளரான ஜெகதீஷன் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இனி திமுகவினர் ஜெயகதீஷனுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஜெகதீஷன் மீதான புகார்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கல்யாணராமன் மீதான குண்டர் சட்டம் ரத்து
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சென்னை 16-வது வார்டு திமுக கவுன்சிலர் சர்மிளா காந்தியின் கணவர் கருணாநிதி அதே பகுதியில் ஒருசில தொழிலதிபர்களிடம் தகராறு செய்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. திமுக பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்கி வருவதால் விரைவில் கட்சித் தலைமை இதற்கு முடிவு கட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாருக்காக பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள் தான் பணியை மேற்கொள்ள வேண்டும். மீறுவோர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR