தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நாளைமறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும், தட்டான்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கும் அதே நாளில் வாக்குப்பதிவு நடக்கிறது. அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வரும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. பிரசாரம் ஓய்ந்தபின் வெளியூரைச் சேர்ந்தவர்கள், தொகுதிக்குள் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தலைமை செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். அதே சமயம் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மற்றும் காவல் உயர் அதிகாரிகள் செல்போன் பயன்படுத்த தடை இல்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.


அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், 
சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அந்த தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடங்களிலும் இன்று மாலை 6 மணி முதல் 18ம் தேதி வாக்குப்பதிவு முடிவு வரை பரப்புரை செய்யக்கூடாது என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.


இதனிடையே, தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் போலீசார் நேற்று கொடி அணி வகுப்பு நடத்தினர்.