VCK: விசிக கேட்ட சின்னத்தை கொடுத்த தேர்தல் ஆணையம்... அதுவும் 2 தொகுதிகளுக்கும்!
VCK Party Symbol: இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கீடு செய்துள்ளது.
VCK Party Symbol Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறுகின்றன. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப். 19ஆம் தேதி நடைபெறும் நிலையில், கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளிலும் வரும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தேசிய அளவில் ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் இந்திய கூட்டணியும் இந்த தேர்தலை சந்திக்கின்றன. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் உடன் திமுக, விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த இரு கூட்டணிகளை தவிர்த்து அதிமுக தனித்து போட்டியிடுகிறது. எனவே, தமிழ்நாட்டில் மும்முனை போட்டி நிலவுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி
பாஜக கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. மேலும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தென்காசி தொகுதியிலும், புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் வேலூர் தொகுதியிலும், ஐஜேகே தலைவர் பாரி வேந்தர் பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேவநாதன் சிவகங்கை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர் நால்வரும் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.
இதை தவிர ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். பாமக 10 தொகுதிகளில் மாம்பழம் சின்னத்திலும், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்திலும், அமமுக 2 தொகுதிகளில் குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகின்றன.
அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் அதிமுக 40 தொகுதிகளில் 33 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. எஸ்டிபிஐ திண்டுக்கல்லிலும், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தென்காசியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தேமுதிக 5 தொகுதிகளில் முரசு சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி
அதேபோல், திமுகவை பார்த்தோமானால் 21 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகின்றனர். கொமதேக நாமக்கல் தொகுதியில் மட்டும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என தலா 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ராமநாதபுரத்தில் ஏணி சின்னத்தில் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் புதுச்சேரியையும் சேர்த்து 10 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இதில் விசிக மற்றும் மதிமுக தனிச்சின்னத்தில் போட்டியிடுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை போலவே விசிகவுக்கு 2 தொகுதிகளையும், மதிமுகவுக்கு 1 தொகுதியையும் திமுக ஒதுக்கியது. ஆனால், கடந்த மக்களவை தேர்தலில் விசிக 1 தொகுதியில் பானை சின்னத்திலும், 1 தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டன. மதிமுகவும் ஈரோடு தொகுதியில் உதயசூரியன் தொகுதியிலேயே தனித்து போட்டியிட்டது.
மதிமுக, விசிக சின்னம்
அந்த வகையில், இம்முறை இரு கட்சிகளும் தனிச்சின்னத்தில் போட்டியிடும் நிலையில், திருச்சியில் போட்டியிடும் மதிமுக அதன் பம்பர சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கேட்டது. இந்நிலையில், திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவிற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் தொகுதியில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்றுடன் வேட்புமனுவை திரும்பப் பெறும் அவகாசம் முடிவடையும் நிலையில், ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் ராமதாஸ் தேர்தல் பரப்புரை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ