குடிமராமத்து பணி என்றால் எடப்பாடிக்கு என்னவென்றே தெரியாது - ஒரே போடாக போட்ட துரைமுருகன்
Tamilnadu Latest News: குடிமராமத்து பணிகளை தமிழக அரசு கைவிட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
Tamilnadu Latest News: வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப். 11) நடைபெற்றது . இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுச்செயலாளரும் மாநில நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுபினர்கள் ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த், அணைக்கட்டு எம்.எல்.ஏவும் வேலூர் மாவட்ட செயலாளருமான ஏ.பி. நந்தகுமார், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் ஜி.வன்னியராஜா, காட்பாடி தெற்கு பகுதி செயலாளரும், துணை மேயருமான சுனில்குமார் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன்,"வருகிற 17ஆம் தேதி வேலூரில் திமுக பவளவிழா மற்றும் முப்பெரும் விழா நடைபெறுகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த விழா வேலூர் கோட்டையில் வரலாறு படைக்கும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அவருடைய கூற்றை மெய்பிக்கும் வகையில் நிர்வாகிகள் திரளாக விழாவிற்கு வர வேண்டும்.
வேலூரில் முப்பெரும் விழா
நான் சாதாரண குடியானவன். 1954ஆம் ஆண்டு என்னுடைய ஊரில் கட்சியை ஆரம்பித்தேன். அப்போது சத்தியவாணிமுத்து தான் வந்து கட்சியை தொடங்கி வைத்தார். எங்கள் ஊரில் சாலை வசதி கிடையாது, மின்சார வசதி கிடையாது, பள்ளிக்கூடம் கிடையாது. நான் தனியாக வந்து ஒவ்வொருவரின் கரங்களையும், கால்களையும் பிடித்து வளர்ந்து இன்று பொதுச் செயலாளராக உங்கள் முன் நிற்கிறேன். இது சாதாரணமானதல்ல. எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய பதவியும் அல்ல. அண்ணாவிற்கு பிறகு ஈ.வி.கே. சம்பத், எம்.ஜி.ஆர்., மதியழகன் ஆசைதம்பி என பலர் பொதுச்செயலாளர் பதவிக்கு ஆசைப்பட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
அண்ணா, நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், அடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக நான் உள்ளேன். இதுதான் திமுக. ஊரெல்லாம் மாநாடு, பொதுக்கூட்டம், கட்சிக் கூட்டங்கள் நடந்தால் நான் தான் தலைமை தாங்க வேண்டும். நான் பிறந்த ஊரிலேயே இருபெரும் விழா நடக்கிறது. அதற்கு நான் தலைமை தாங்க உள்ளேன். இந்த விழாவிற்கு ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் திரளாக வர வேண்டும். நீங்கள் தான் எனக்கு தாய், தந்தை. பவள விழா மற்றும் முப்பெரும் விழாவிற்கு பொதுச்செயலாளராக அழைக்கிறேன். திரண்டு வாருங்கள்.
உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவிப்போம்
அதன்பின் செய்தியாளர்களை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் காவிரி ஆற்றின் பாசன வசதி பெறும் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாரே என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்,"காவிரியில் தண்ணீர் வழங்க மாட்டோம் என நாங்களா கூறினோம்?. கர்நாடகா அரசு தண்ணீர் வழங்குவதை மறுக்கின்றது. கர்நாடகா அரசை கேட்டால் தண்ணீர் இல்லை என்று கூறுகிறார்கள். தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்று கூறுவது உச்சநீதிமன்றம். எனவேதான் வரும் செப். 21ஆம் தேதி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய கருத்தை தெரிவிக்க உள்ளது" என்றார்.
தமிழ்நாடு அரசு அப்பீலா...?
எடப்பாடி பழனிசாமி மீது ரூ. 4 ஆயிரத்து 800 கோடி முறைகேடு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது குறித்து எனக்கு தெரியாது என கூறிய அமைச்சர் துரைமுருகன் அவரது பாணியில் சிரித்தபடியே ஹா...ஹா...என கட்டை விரலை அசைத்து காட்டினார்.
குடிமராமத்து பணிகளை தமிழக அரசு கைவிட்டு விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு?."குடிமராமத்து பணி என்றால் என்ன வென்றே எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியாது" என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும் படிக்க | கொடநாடு வழக்கு: ’சுயநினைவோடு தான் இருக்கிறேன்’ கனகராஜின் அண்ணன் தனபால் பேட்டி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ