முன்னாள் IPS அதிகாரி அண்ணாமலை குப்புசாமி பாஜக-வில் சேர்ந்தார்!!
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி, துணை போலீஸ் கமிஷனராக (தெற்கு) பெங்களூரில் பணியாற்றியவர். பல ஊகங்களுக்கு மத்தியில் அவர் பாஜகவில் செவ்வாய்க்கிழமை சேர்ந்தார்.
சென்னை: முன்னர் அறிவித்தபடி, 'கர்நாடக காவல்துறையின் சிங்கம்' என்று அழைக்கப்படும் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy) இன்று (ஆகஸ்ட் 25), பாஜக-வில் சேர்ந்தார். அவர் அறிவித்தபடி, தில்லி கட்சி தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பி முரளிதர் ராவ் (P Muralidhar Rao) மற்றும் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் எல் முருகன் (L Murugan) ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
தலைமையகத்தில் பாஜக-வில் (BJP) இணைந்த அண்ணாமலை பிரதமர் நரேந்திர மோடியைப் (Narendra Modi) பாராட்டினார். அச்சமற்ற தன்மை, தைரியம், அறிவாற்றல் மற்றும் ஊக்குவிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ள தலைவர் அவர் என்று அண்ணாமலை கூறினார்.
"பாஜக-வின் கொள்கைகளை வலுப்படுத்தவும், தேசியவாத உணர்வை தமிழகத்திற்கு கொண்டு வரவும் நான் பணியாற்றுவேன்" என்று 36 வயதான முன்னாள் காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார். இவர் ஐபிஎஸ் பணியிலிருந்து விலகியதிலிருந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பொடத்தக்கது.
ALSO READ: ‘பாஜக தமிழ் கலாச்சாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் எதிரி’ ஸ்டாலினின் காட்டமான பதில்!!
பாஜக பொதுச் செயலாளர் பி.முரளிதர் ராவ், கட்சி பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை மாநிலத்தில் ஈர்த்து வருகிறது. தமிழகம் காலம் காலமாக இரண்டு திராவிடக் கட்சிகளான அதிமுக மற்றும் திமுகவால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு மாநிலம் என்று தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் பாதியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்தில், தேசியவாத இயக்கத்தை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றார் அவர். அண்ணாமலை பின்னர் பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டாவை (JP Nadda) சந்தித்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலை குப்புசாமி கர்நாடகாவில் 10 ஆண்டுகள் இருந்தார். அவர் 2019 ல் போலீஸ் பணியில் இருந்து விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்தாலும், அவர் பதவி விலகிய பின்னர் பாஜகவில் சேருவார் என்று யூகங்கள் எழுந்தன.
குற்றவாளிகளை வெற்றிகரமாகத் தகர்த்ததற்காக கர்நாடக மாநில காவல்துறையில் அண்ணாமலை "சிங்கம்" என்று அழைக்கப்பட்டார். அவர் பொதுமக்கள் மத்தியில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வலம் வந்தார்.
தனது நேர்மையான அணுகுமுறையால் அறியப்பட்ட அண்ணாமலை, சிவில் சேவையில் நுழைவதற்கு முன்பே, பல வகைப்பட்ட பணிகளைச் செய்ய வேண்டும் என்ற கனவை வளர்த்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.