கிசுகிசு : அண்ணனுக்கு ஜெயிக்கிற ஐடியாவே இல்ல போல - முன்னாள் தம்பிகளின் கிண்டல்
Gossip : கோட்டைக்கு ஒரு நாள் போவோம் என வீரவசனம் பேசும் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் இயக்குநர் இத்தனை ஆண்டுகளாக ஒரு இடத்தில் கூட வெல்லவும் இல்லை, இனி வரும் தேர்தல்களிலும் வெல்லப்போவதுபோல் தெரியவில்லை.
Gossip in Tamil Nadu Politics : ஊர் பக்கம் சந்தித்துக் கொண்ட முன்னாள் தம்பிகள் இருவர் பேசியதை எல்லாம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த குசும்பன், இந்த விஷயத்தை இன்னைக்கு யார் கிட்ட சொல்றது என ஒரு ஆளை தேடிக் கொண்டிருந்தான். டீ கடையும் இன்னைக்கு லீவு என்பதால், வழக்கமாக அவன் அரட்டையடிக்கும் டீ மாஸ்டர் கடையில் இல்லை. அதனால், டீக்கடைக்கு அருகில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த ஒருவரிடம் நைசாக பேச்சுக்கொடுத்த குசும்பன். ’அண்ணே, உங்கள பாத்தா அரசியல் மேல ஆர்வம் இருக்கிற மாதிரி தெரியுது, அதுவும் அண்ணனோட நியூஸையே படிச்சிட்டு இருக்கீங்க போல’ என்றான். ‘ஆமா தம்பி, இவரும் நல்லா பேசுறாரு, ஆனால் ஜெயிக்க மாட்டேங்கிறாரு, என்னானு தான் தெரியல?’ என்றார். உடனே குசும்பன், அப்பாடா விஷயத்தை சொல்றத்துக்கு கேப்பு கிடைச்சிருச்சு விட்ராதடா என மனசுக்குள் சொல்லிக் கொண்டு முன்னாள் தம்பிகள் பேசிக் கொண்டதை சொல்ல ஆரம்பித்தான்.
" அண்ணே, நீங்க சொல்றது சரிதான். அண்ணன் நல்லா பேசுறாரு, ஏற்கனவே இயக்குநராக வேற இருந்ததால ஸ்கிரிப்ட் உருவாக்குறது எல்லாம் அவருக்கு கைவந்த கலை. ஆனால், படத்தில பேசுற வசனமெல்லாம் களத்துல எடுபடாது இல்லையா?. இதை நான் சொல்லல, அவருகூட இருந்த முன்னாள் தம்பிகளே பேசிக்கிட்டாங்க. அவருகூட ஆரம்பத்தில இருந்த முக்காசி பேர் இப்போ இல்ல ஏன்?. ஏன்னா அவரு, தான் போட்டியிடுற தொகுதியில மட்டும் ஜெயிச்சிடனும்னு நினைக்கிறாரு. கட்சியில் இருக்கிற மற்ற நிர்வாகிகள், நான் ஜெயிக்குறதுக்கு முன்னால, வேற யாரும் ஜெயிச்சு கோட்டைக்கு போய்டக்கூடாது நினைக்குறாராம். அவருக்காகவே எல்லாரும் உழைக்கணும், காசு செலவு பண்ணணும், அவரு சொல்றத மட்டும் கேட்கணும்னுங்கிறது தான் கொள்கையாம். இதை எதிர்த்து ஒரு கருத்து சொல்லிட்டா, அவரு அப்போவே கட்சிய விட்டு விலகி ஓடிப் போய்ரணுமாம்.
மேலும் படிக்க | கிசுகிசு : தூதுவிடும் தோழி, பழைய பாசத்தால் கரையும் மாஜிக்கள்..!
இது எல்லாம் தெரியாம அவர ஆரம்பத்துல நம்பி, வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு, கடன வாங்கி கட்சி கட்சினு சுத்துன பலபேர் இப்போ கடனாளியா சுத்திட்டு இருக்காங்க. கட்சிய விட்டுட்டு ஓடிப்போய் நிம்மதியா வாழ்ந்தபோதும் இருக்கிறாங்க. ஆரம்பத்துலேயே அண்ணன் தான் கொள்கை, அவரு பேசுறதுதான் சட்டம் அப்படிங்கிறது தெரியலையாம் அந்த தம்பிகளுக்கு. அது தெரிஞ்சதும், இது சரிபட்டு வராதுன்னு கட்சிய விட்டு விலகிட்டாங்களாம். இல்ல, விலக்கப்பட்டாங்களாம்.
கட்சிக்குள்ள கணக்கு வழக்கு கேட்க கூடாது, வரவு செலவு பத்தி பேசவே கூடாதுங்கிறதும் ஒரு கொள்கையாம். இதைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது என்ற சொல்லப்படாத வாய்ப்பூட்டுச் சட்டமும் கட்சிக்குள்ள இருக்காம். அண்மைக்காலமாக அண்ணன் பேசுறத வச்சி பாக்கும்போது, அவரு இன்னும் கட்சி ஜெயிக்கணும், நிர்வாகிகள் ஜெயிக்கணும் என்ற ஒரு துளி இலக்குகூட இல்லாம தான் சுத்திட்டு இருக்காருன்னு அந்த முன்னாள் தம்பிங்க பேசிக்கிட்டாங்க.
அடுத்து வர்ற கோட்டை தேர்தல்ல மட்டும் எங்க ஜெயிக்கப்போறாங்க?, அவரே டெபாசிட் வாங்குனா பெருசு என அந்த தம்பிங்க சொன்னாங்க. ஒரு கட்சி தலைவருக்கே 15 வருஷம் கழிச்சும் இந்த நிலைமைன்னா, அங்க இருக்க மத்த நிர்வாகிகளோட நிலைமை யோசிச்சு பாருங்க. ஆனால், கட்சிக்கு நிதி வசூலிக்கிற வேலை மட்டும் ஒருநாளும் நின்னபாடில்லை. இத்தனை நாளுமா மக்கள் ஒருவர நிராகரிப்பாங்க?. இத்தனைக்கும் சமூக ஊடகத்துல அவங்களுக்கு இருக்கிற பலம் வேற யாருக்குமே இல்ல. அப்படி இருந்தும் மக்கள் அவரையும் அந்த கட்சிக்காரங்களையும் நிராகரிக்கறாங்கனா, தப்பு இருக்குனு தான அர்த்தம். இதை அவருகிட்ட சொன்னா, ஏத்துக்காமா, மக்கள் காசு வாங்கிட்டு ஓட்டுபோட்டுட்டாங்கனு ரெடிமேட் வசனத்தை தயாரா வச்சிருப்பாருனு தம்பிங்க சொல்றாங்க.
மேலும் படிக்க | கிசுகிசு : முதன்மையானவரின் கடுகடுப்பு.... காக்கிகளுக்குள் நடந்த அதிரடி மாற்றம்..!
அவரை பொறுத்தவரைக்கும் தானும் ஜெயிக்க மாட்டாரு, கூட இருக்கவங்களையும் ஜெயிக்க வைக்க மாட்டாரு. எக்காலத்திலும் அவருக்கு ஜெயிக்கிற ஐடியாவே இருந்ததில்லை. வீரவசனம் பேசி மக்களை திசைதிருப்புற வேலை மட்டும் செஞ்சி, பூ கட்சி இங்க வேறூண்ருவதற்கான அத்தனை வேலைகளுக்கும் அச்சாரம் போட்டுக் கொடுத்துட்டு இருக்கிறாராரு. அதுக்கு அவருக்கு தனி கவனிப்பும் கிடைச்சிட்டு இருக்கனு அந்த தம்பிங்க கிண்டலா சொல்றாங்க. இயக்குநரோட பேச்சை கேட்டு ரசிக்கிற எல்லோரும் ஒரு காலத்துக்கு அப்புறம் உண்மை தெளிஞ்சு வேற கட்சிக்கு ஜம்ப் அடிச்சுருவாங்க, இல்ல அரசியல் வேண்டாம்னு ஓடிருவாங்களாம்.
இப்போதும் அண்ணன் பேசுறத கேட்டு சிரிக்கிறவங்க மட்டும் உறுப்பினரா இருக்கலாம், சிரிக்காதவங்களுக்கு கெட்அவுட்தானாம். அவரு அப்படியே தான் இருக்காரு, பேசுற கன்டென்ட் மட்டும் காலத்துக்கு ஏற்ப மாறிகிட்டு இருக்கு. இப்படியே போன அடுத்து வர்ற கோட்டை தேர்தல் வரைக்கும் வண்டிய ஓட்டலாம், ஒருவேளை அணுகுமுறை, பேசுற அரசியல் எல்லாம் மாறுச்சுனா வண்டி கொஞ்சம் கூடுதலா போகும். ஆனால் இயக்குநர் அண்ணனோட கோட்டை கனவு, கனவாகவே தான் கடைசி வரைக்கும் இருக்கும்னு சொல்லிட்டு, அந்த முன்னாள் தம்பிங்க கிளம்பிட்டாங்க" என சொல்லிவிட்டு குசும்பன் திரும்பி பார்க்க, அங்க இருந்தவர் எந்நேரமோ கிளம்பியிருந்தார். இவ்வளவு நேரம் தனியா தான் பேசிட்டு இருந்தேனா என தலையில் அடித்துக் கொண்டு கிளம்பினான் குசும்பன்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ