அனுமதியின்றி சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைத்து விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனுமதியின்றி சாலைகளில் கட்சி கொடி கம்பங்கள் வைப்பதும் ஆக்கிரமிப்பு தான் என தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சேலம் கன்னங்குறிச்சி சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்படும் சாலைகளை தோண்டி, அரசியல் கட்சியினர், கட்சி கொடி கம்பங்களை நாட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.


இது தமிழ்நாடு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், பொது இடங்களில் கட்சிக் கொடிக்கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சாலைகளில் வைக்கப்பட்ட கொடி கம்பங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது.


இந்த பொதுநல வழக்கை விசாரணை, நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி கொடி கம்பங்கள் நடுவது என்பது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனாால், "பொது சொத்துக்கள் சேதம் அடைந்தால், பாதிப்புகளை மதிப்பீடு செய்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து இழப்பீடுகளை சட்டப்படி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அறிவுறுத்தினர். "பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் கொடிக் கம்பங்கள் ஆக்கிரமிப்பாகத்தான் கருத முடியும்" என தெரிவித்த நீதிபதிகள், "விதிமீறி கொடிக் கம்பங்கள் அமைப்பவர்கள் மீது, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.