Chennai Rains: நள்ளிரவிலும், காலையிலும் கனமழை - சென்னை இப்போது எப்படி இருக்கிறது?
Chennai Rains Latest News Updates: சென்னையில் நேற்றிரவும், இன்று காலையிலும் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னையின் பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளின் நிலை என்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
Chennai Rains Latest News Updates: வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழந்த காற்றழுத்தமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விரைவில் வலுபெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், அடுத்த இரண்டு நாள்களில் தொடர் கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இன்று ஆரஞ்சு அல்ர்ட்டும், நாளை (அக். 16) ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளை அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக திருவொற்றியூரில் மழை
குறிப்பாக, சென்னையின் பெருநகர் பகுதியிலும், புறநகர் பகுதியிலும் இடி, மின்னலுடன் கடும் கனமழை பெய்தது. இன்று காலையிலும் சைதாப்பேட்டை, கிண்டி, திருவொற்றியூர், ராயபுரம், காசிமேடு, வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், மணலி, திருவிக நகர், மாதவரம், கொளத்தூர், புளியந்தோப்பு உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது. திருவொற்றியூரில் அதிகபட்சமாக 84.3 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதனால் நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக, சென்னை தரமணியில் இருந்து பெருங்குடி செல்லும் பிரதான சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தரமணி, பெருங்குடி பிரதான சாலையில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதே போல் ஓஎம்ஆர் சாலையிலும் பல்வேறு ஐடி நிறுவனங்கள் உள்ளன. இந்த பிரதான சாலை வழியாக தான் ஐடி நிறுவன ஊழியர்கள் நிறுவனங்களுக்கு சென்று வருகின்றனர். தற்போது இந்த பிரதான சாலையில் மழை நீர் ஆனது தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும், ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும்படி அரசு தரப்பில் இருந்து நேற்று அறிவுறுத்தல் வெளியானது.
மேலும் படிக்க | Red Alert என்றால் என்ன? மழை காலங்களில் இது கொடுக்கப்படுவது ஏன்?
அதேபோல் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் ஆங்காங்கே மூடப்படாமல் உள்ளதாலும் மழைநீர் செல்வதற்கு வழியில்லாமலும் இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினமும் கனமழை பெய்ததால் இந்த சாலை மழைநீர் தேங்கியது. அதேபோல், நேற்று இரவு பெய்த கனமழையால் தற்போதும் இந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி அதிகாரிகள் மெத்தன போக்கு இந்த மழைநீர் தேங்குவதற்கு காரணம் என வாகன ஓட்டிகள் ஒரு குற்றச்சாட்டை வைக்கின்றனர்.
மெட்ரோ ரயில் கூடுதலாக இயக்கம்
ஆனால் சென்னையின் பிற முக்கிய பகுதிகளில் மழைநீர் முற்றிலும் வடிந்து காணப்படுகிறது. இரவில் கனமழை பெய்தாலும் கூட சுரங்கப்பாதைகளில் நீர் ஏதும் தேங்கவில்லை என மாநாகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களுடன் சென்னையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது மெட்ரோ ரயில் சேவைகளும் இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கூடுதலாக இயக்கப்பட உள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கலாம். சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ, மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்துகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதயநிதி ஆய்வு
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கரணை ஏரிக்கரைப்பகுதி மற்றும் அம்பேத்கர் சாலை கால்வாய் பாலம் ஆகிய பகுதிகளில் நள்ளிரவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக இந்த ஆய்வின் போது பெருமழையிலும் மழை வெள்ளநீர் செல்லக்கூடிய வழித்தடங்கள் தடைபெறாமல் இருப்பதற்காக மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.
மேலும் படிக்க | இடி, மின்னல் அடிக்கும்போது... செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?
இதனை அடுத்து சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பெசன்ட் சாலை பகுதியில் நடைபெற்று வந்த மழை நீரை அகற்றும் பணியினையும் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அண்ணா சாலை மற்றும் ஆழ்வார்பேட்டை பகுதிகளில் பகுதியில் நடைபெற்று வரக்கூடிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளையும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
உதயநிதி விளக்கம்
தொடர்ந்து நள்ளிரவில் ஊடகங்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின்,"பருவக்கால மழையின் போது தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய மழைக்கால அவசர பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டேன். கனமழை பல்வேறு பகுதிகளில் பெய்திருந்தாலும் இது தொடர்பாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். மேலும் பல இடங்களில் நீர் வற்றிவிட்டது. இருப்பினும் இதைவிட அதிக மழை வந்தாலும் மழை நீரை அகற்றுவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டுள்ளோம்.
குறிப்பாக பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர் வழித்தடங்கள் செல்லக்கூடிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன். அந்தப் பகுதியில் வசியக்கூடிய மக்களிடமும் அவர்களது பிரச்சனைகள் குறித்து கேட்டு அறிந்துள்ளேன். இந்த ஆய்வு தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்களின் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். மேலும் கடந்த முறை மழை வெள்ளத்தால் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ