செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு : அமலாக்கத்துறை சறுக்கியது எங்கே?
Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை முடிக்க ஆகும் கால அளவை அமலாக்கத்துறை தெரிவிக்காததால், உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.
Senthil Balaji Bail : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு சுமார் 471 நாட்களுக்குப் பிறகு ஜாமீன் கிடைத்துள்ளது. அவருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் இன்று பிணை வழங்கியது. உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ் ஓகா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதுடன் சில நிபந்தனகளையும் விதித்துள்ளார். சென்னையில் இருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் கையெழுத்து இட வேண்டும். வழக்கின் சாட்சியங்களை கலைக்கக்கூடாது, வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறையின் வாதங்களை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. அத்துடன் ஒருவரின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அதிக நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு எந்த தடையையும் உச்சநீதிமன்றம் கொடுக்கவில்லை.
மேலும் படிக்க - Chennai Rain | எங்கெல்லாம் பெய்யும்! சென்னையை புரட்டி போட்ட மழை! மக்கள் கடும் அவதி
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஜாமீன் வழக்கில் மூன்று முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டப்பட்டது. இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவரின் உடல் நிலை காரணங்களைக் காட்டி ஜாமீன் கொடுக்க வேண்டும் என வாதிடப்பட்டது. அடுத்ததாக செந்தில் பாலாஜி மக்கள் பிரதிநிதி என்பதால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டேன் என உறுதியளிக்கப்பட்டது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டது. மூன்றாவதாக, அமலாக்கத்துறையின் அதிகார வரம்பு குறித்து செந்தில் பாலாஜி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பணப்பரிமாற்றம் என வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த வழக்கின் மூலத்தன்மை என்பது செந்தில் பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கிக் கொடுத்தாரா? என்பது தான். அந்த விஷயத்தில் அவர் அப்படி செய்தாரா? பணம் வாங்கினாரா என்பதை உறுதி செய்யாமல் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் ஆணித்தரமாக கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை பதிவு செய்த வாதத்தில், செந்தில் பாலாஜி அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கிறார், அவருடைய தம்பி இன்னும் தலைமறைவாகவே இருக்கிறார், வழக்கை வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார், அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி பணம் வாங்கியதாக கூறப்படும் மூல வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என டெக்னிக்கலான பாயிண்டுகளை முன்வைத்தது.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்
மேலும், செந்தில் பாலாஜி அரசு வேலைக்கு பணம் வாங்கியதாக கூறப்படும் மூல வழக்கு மீதும் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு ஒரே நேரத்தில் இரண்டு வழக்குகளை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டுமே விசாரிக்க முடியும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் ஆணித்தரமான வாதங்களாக முன்வைக்கப்பட்டன.
அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் மூல வழக்கு விசாரணை எப்போது முடியும் என கேட்டதுடன், வழக்கின் தன்மைபடி மூன்று ஆண்டுகள் வரை ஆக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் அமலாக்கத்துறை அதிகபட்சம் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடித்துவிடுவோம் என கூறிய நிலையில், அந்த வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ