கலைஞர் கருணாநிதி - தமிழ்நாட்டுக்கு தலையெழுத்து எழுதிய தலைவன்!
எழுதியதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. அண்ணாவின் மறைவுக்கு பிறகு 44 வயதில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர் போட்ட முக்கியமான கையெழுத்துக்களில் கை ரிக்ஷா முறை ஒழிப்பும் ஒன்று.
இந்திய அரசியலில் தமிழ்நாட்டு அரசியல் கொஞ்சம் வேறுபாடானது. மற்ற மாநில அரசியலில் எல்லாம் தலைவர்கள் உருவாக்கப்படுவார்கள். ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் மட்டும்தான் தலைவர்கள் உருவாவார்கள். பெரியார், அண்ணா போன்றோர் தமிழகத்தில் உருவான, உருவாகும் தலைவர்களுக்கு ரோல் மாடல். அதேபோல் இன்னொருவரும் இருக்கிறார். அவரது பெயர் முத்துவேல் கலைஞர் கருணாநிதி. பெரியாரின் ஈரோட்டு பள்ளியில் பகுத்தறிவு பழகி, பேரறிஞர் அண்ணாவின் காஞ்சி கல்லூரியில் திராவிடத்திற்காகவும், சமூக நீதிக்காகவும் சுழன்று, தமிழகத்தின் தலைவனாய் உயர்ந்தவர்.
கவிஞர் வாலி சொன்னதுபோல் பெரியார், அண்ணா முழங்கை என்றால் கலைஞர் கருணாநிதி முழு கை. அந்த கைகள்தான் பெரியாரின் தடியையும், பேரறிஞர் அண்ணாவின் திசையையும் ஃபாலோ செய்தன. பராசக்தி படம் அனைவரும் அறிந்தது. அது இச்சமூகத்தில் எவ்வளவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியும். அந்த அதிர்வலையை தனது பேனா மூலம் எழுப்பியவர் கலைஞர் கருணாநிதி. 28 வயதில் பராசக்தியில், மனிதனை மனிதனே ரிக்ஷாவில் இழுக்கும் பழக்கம் குறித்து இப்படி எழுதுகிறார், “நீ சென்னைக்கு மேயராக வந்து இந்த பழக்கத்தை மாற்றிவிடு”.
எழுதியதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. அண்ணாவின் மறைவுக்கு பிறகு 44 வயதில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர் போட்ட முக்கியமான கையெழுத்துக்களில் கை ரிக்ஷா முறை ஒழிப்பும் ஒன்று. எழுதிவிட்டாலே சமூகம் திருந்திவிடும் என்று நினைக்கும் படைப்பாளர்கள் மத்தியில் கருணாநிதி மட்டும்தான் தான் எழுதியதை தானே நடைமுறைப்படுத்தினார். அதேபோல் வீட்டு வசதி மாற்று வாரியம் அமைத்தது, பேருந்துகளை பொதுவுடைமை ஆக்கியது என கலைஞர் போட்ட விதைகள் அத்தனையும் வீரியமானவை. அந்த விதைகள்தான் இன்று இந்தியா முழுமைக்கும் நிழல் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆம் முக்கால்வாசி இந்தியா தற்போது மு.கருணாநிதியின் ஆட்சியைத்தான் பின்பற்றிக்கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர் பிரிந்து கலைஞரை 10 வருடங்களுக்கும் மேலாக முதலமைச்சர் நாற்காலியை தொடவிடாமல் செய்தாலும் எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி செயலாற்றிய விதம் எல்லாம் யாருக்கும் வாய்க்காத குணம். வெற்றியில் ஒரு மனிதன் எவ்வளவு வேகமாக செயல்படுகிறானோ தோல்வியில் அவன் அதனைவிட வேகமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் ஒருவன் மனிதன் என்ற நிலையிலிருந்து தலைவன் என்ற நிலைக்கு நகர்கிறான். கருணாநிதி தலைவன் என்ற நிலைக்கு நகர்ந்ததற்கு காரணம் அவர் சந்தித்த தோல்வி, வஞ்சம், வன்மம், துரோகம். அப்படிப்பட்ட இக்கட்டான நிலையில்தான் கருணாநிதி வீரியமாக செயல்பட்டார். ஒரு முதலமைச்சர் எந்த சிக்கலையெல்லாம் சந்திக்கக்கூடாதோ அத்தனை சிக்கல்களையும் அவர் சந்தித்தார். ஆனால் அதைப் பற்றி துளியும் கவலை கொள்ளாமல் சமூக நீதிக்காகவும், பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், தொழில் நுட்ப வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பணியாற்றிக்கொண்டே இருந்தார்.
படைத்தவன் பெயர் அவன் படைத்ததில் இல்லை என்பது ரணமானது. அந்த ரணத்தையும் சந்தித்தவர் கலைஞர் கருணாநிதி. இருந்தாலும் எந்த வித அலட்டலுமில்லாமல், சுய பச்சாதாபம் பேசாமல் அடுத்தடுத்த படிகளில் தமிழ்நாட்டை ஏற்றி வைத்தார். அவரது ஆட்சிக்காலத்தில் 1996 - 2001 ஆட்சிக்காலம் மிகவும் முக்கியம். அந்த ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாடு நவீனமாக ஆரம்பித்தது. நவீனம் என்பது ஆடம்பரமாக இருக்கக்கூடாது அவசியமானதாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து பார்த்து பார்த்து அந்த 5 ஆண்டுகளும் தமிழகத்தை சுமந்து பிரசவித்தவர். 340 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா, உயிரி தொழில்நுட்பவியல் பூங்கா, சென்னைக்கு மேம்பாலங்கள், மாவட்டத்துக்கு ஒரு மருத்துவம், பொறியியல் கல்லூரி, உலகம் இனி கம்ப்யூட்டருக்குள்தான் இருக்கப்போகிறது என்பதை உணர்ந்து பள்ளி பாடங்களில் கணினி அறிவியலை பரவலாக சேர்த்தது என பல விஷயங்களை அந்த ஆட்சிக்காலத்தில் செய்தாலும் அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு தோல்வியையே பரிசாக கொடுத்தனர்.
மேலும் படிக்க | கருணாநிதிக்கு "பாரத ரத்னா" விருது : வைரமுத்துவின் வாழ்த்துக் கவிதை.!
பொதுவாக காமராஜரை தோற்கடித்த மண் இது என்று நொந்துகொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதேபோல் 96 - 2001வரை தமிழகத்தை மேம்படுத்திய கருணாநிதியையும் தோற்கடித்த மண் இது என்று பேசப்பட்டிருக்க வேண்டும். காமராஜருக்காக நொந்துகொள்பவர்கள் கருணாநிதியை லாவகமாக மறைத்தார்கள். ஆனால் உண்மை தானாக வெளிப்படும் என்பதை வரலாறு அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறார். உயிருடன் இருந்தபோது கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர் உடல்நிலை சரியில்லாதபோதும், உயிரிழந்த பிறகும் அத்தனை பேரின் அன்பை சம்பாதித்தவர். அவரை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அந்த ஜனநாயகத்தன்மையை கட்சிக்குள்ளும் சரி, ஆட்சிக்குள்ளும் சரி பரவலாக தூவியவர் கலைஞர் கருணாநிதி. ஈழத்தை வைத்து இன்றுவரை கருணாநிதியை விமர்சிக்கும் பழக்கம் இருக்கிறது. எந்த கருணாநிதி ஈழத்தை வைத்து விமர்சிக்கப்படுகிறாரோ அந்தக் கருணாநிதிதான் ஈழத்துக்காக இரண்டுமுறை தனது ஆட்சியை இழந்தார். தலைவன் பெறுவதற்கு மட்டுமில்லை இழப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியவர்.
திராவிடம் பேசும் கருணாநிதி பாஜகவுடன் எதற்கு கூட்டணி வைத்தார் என்று கேட்டால் அவர்களுக்கு அரசியல் புரியவில்லை என்று அர்த்தம். வாக்கு அரசியல் என்று வந்துவிட்டால் சில விஷயங்களில் சமரசம் செய்துதான் ஆக வேண்டும். அதனால் வாக்கரசியல் வேண்டாம் என்று பெரியார் ஒதுங்கினார். திமுகவை ஆரம்பித்த அண்ணாவை சாடினார். ஆனால் அண்ணாவும், கலைஞரும் வாக்கரசியலுக்கு வந்தார்கள்.சமரசம் செய்தார்கள். அந்த சமரசம் என்பது மாநில உரிமை, இட ஒதுக்கீடு, கொள்கை போன்ற விஷயங்களில் இல்லை. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின்போது பாஜக கூட்டணியில் இருந்தாலும் கடுமையான எதிர்வினையாற்றினார் கருணாநிதி. கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் கருணாநிதியை மட்டுமே விமர்சிப்பதுதான் ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை. ஆனால் கருணாநிதியை மட்டும்தான் பலர் நிரந்தர எதிரியாக பார்க்கின்றனர். அவர் உயிரிழந்த பிறகு நடந்த சம்பவங்கள் அதனை இந்த நாட்டுக்கே உணர்த்தின.
தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்க வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், பெண்கள் முன்னேற வேண்டும் என்பதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் கனவு. அண்ணா ஆட்சியமைத்து இரண்டு வருடங்களில் பல படிக்கட்டுக்களில் தமிழ்நாட்டை முன்னேற்ற ஆரம்பித்திருந்தார்.
அந்த சமயத்தில் அவர் இறந்துபோக இனி தமிழ்நாடில் நினைத்தபடி விளையாடலாம் இனி நாம் போடும் கையெழுத்துதான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் என தேசிய கட்சிகள் கணக்கு போட்டன. ஆனால் அண்ணா போனால் என்ன அவரது தம்பி இருக்கிறேன் என முழங்கி தமிழ்நாடுக்காகவும், தமிழர்களுக்காகவும் பல சீர்திருத்த, முற்போக்கு கையெழுத்துக்களை போட்டவர் கருணாநிதி. அவரது கையெழுத்துக்கள்தான் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றின. இன்னமும் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை புதிதாக எழுதிய தலைவன் கலைஞர் கருணாநிதி.
மேலும் படிக்க | சமரசமில்லாத சமூகநீதிப் போராளி கலைஞர் கருணாநிதிக்கு இன்று பிறந்தநாள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR