நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
புதுடெல்லி: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்துவரும் திருமதி. சசிகலா நடராஜன் ஆகஸ்ட் 14-ம்தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அ.தி.மு.கவின் பொதுச்செயலாளரும், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் என மொத்தம் நான்கு பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 2014-ம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அந்த சமயத்தில் தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் தலா நான்கு ஆண்டு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதா 2016 டிசம்பர் ஆறாம் தேதியன்று மறைந்தார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பையே 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் கடந்த 2017-ம்ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தண்டனை காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே நன்னடத்தை விதியின் கீழ் சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | $800 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருளை அழிக்கும் மியான்மர்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சசிகலா எப்போது விடுதலையாவர் என்று வினவியிருந்தார். இதற்கு பதிலளித்த கர்நாடக சிறைத்துறை, ’சசிகலா விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால், அவரை விடுவிக்கும் சரியான தேதியை எங்களால் தெரிவிக்க முடியாது’ என பதிலளித்தது.
இந்த நிலையில் நேற்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சசிகலா ஆகஸ்ட் 14-ம்தேதி விடுதலை செய்யப்படுவார் என்ற செய்தி வைரலானது. பாஜக நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி இந்த செய்தியை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
ஆனால், சசிகலாவின்விடுதலை தேதி தொடர்பான தகவல் தவறானது. சிறைத்துறை இதுபோன்ற எந்தத் தகவலையும் வெளியிடவில்லை என்று பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், 2014-ம் ஆண்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது என்பதால் தமிழக முதலமைச்சராகும் சசிகலாவின் கனவு கானல்நீரானது.
Also Read | பாலியல் துணையின் ஆயுள் குறைவுக்கு ஆண்கள் காரணமா?
பிறகு, தமிழக அரசியலில் வீசிய சூறாவளியால் பல விஷயங்கள் நிலைமாறின. தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகியதும், பொதுப்பணித்துறை அமைச்சராக அமைச்சர் முதலமைச்சரானதும் என தமிழகம் பல அரசியல் திருப்புமுனைகளைக் கண்டது. அதன்பிறகும், சூறாவளியின் தாக்கம் முடிவடையவில்லை. முதலமைச்சராக இருந்து பதவி விலகிய ஓ.பன்னீர் செல்வம் துணை முதலமைச்சராக தற்போது பதவி வகிக்கிறார்.
சசிகலா நடராஜனின் மூத்த சகோதரியின் மகனான டி.டி.வி. தினகரன் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு போர்க்கொடி உயர்த்த, இறுதியில் கட்சியை உரிமைக்கோரிய அவருக்கு அதிமுக இல்லை என்றானதும் அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில், புதிய கட்சியை துவங்கி, நடத்தி வருகிறார்.
இதுபோன்ற நிலையில், தற்போது சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அது தமிழக அரசியலில் எதுபோன்ற தாக்கங்களை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நன்னடத்தை காரணமாக அடுத்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வர வேண்டிய சசிகலா, தற்போதே வந்துவிடுவார் என்று வெளியாகும் செய்திகளால் தமிழக அரசியலில் மற்றொரு புயல் வீசலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மேலும், சசிகலா தரப்புக்கு ஆதரவாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க-வின் சுப்பிரமணியன் சுவாமியும் குரல் கொடுத்து வந்தார்.