முன்னறிவிப்பின்றி விவசாயிகள் நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விவசாயவிளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக சாலை ஓரங்களில் புதைவடமாக மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். 


ஏற்கனவே உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பு குறைந்ததற்கு முறையான இழப்பீடும் வழங்க வேண்டும். கோபுரங்கள் மற்றும் மின் பாதைகள் அமைந்துள்ள இடத்திற்கு வருட வாடகையும் வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், முன்னறிவிப்பின்றி விவசாயிகள் நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பது கண்டனத்திற்குரியது எனவும், விவசாயிகளை உடனடியாக முதல்வர் அழைத்துப் பேசி அதன்படி உயர் மின்கோபுரம் அமைக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அந்த அறிக்கையில், கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியே உயர் மின்னழுத்த மின்பாதை அமைக்கும் திட்டத்தை மேற்கொள்ள கண்டனம் தெரிவித்துள்ளார்.


முன்னறிவிப்பின்றியும், அனுமதியின்றியும் விளைநிலங்களில் மின்கோபுரங்கள் அமைப்பது விவசாயத்தையும், விவசாயிகளையும் கடுமையாக பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார். எனவே, நிலத்துக்கடியில் கேபிள் வழியே மின்சாரம் கொண்டு செல்லும் வழிமுறைகளை தீவிரமாக ஆராய வேண்டுமென ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.