தர்மபுரி டவுன் மதிகோன்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (45), பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவரது 15 வயது மகள், கடந்த 2020ல் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்த போது, ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்காக, புதிதாக ஒரு செல்போனை, சந்திரன் வாங்கிக் கொடுத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த செல்போனில், இன்ஸ்டாகிராம், ஷேர்சாட் உள்ளிட்ட செயலிகள் மூலம், புதிய நண்பர்களை மாணவி பெற்றுள்ளார். இந்நிலையில், 2020 அக்டோபர் மாதம், திடீரென மாணவி மாயமானார். பதறிய பெற்றோர், தர்மபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பெங்களூருவில் வசிக்கும் ஜிம் மாஸ்டர் நரசிம்மன் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.


ALSO READ | ரவுடிக்கு உதவிய காவல்துறை ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி


நீதிமன்ற உத்தரவின்பேரில், மாணவியை தேடுவதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், நடத்திய தீவிர விசாரணையில், திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பத்திற்கு இருவரும் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. கடந்த 14ம் தேதி அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டு, அவரை கடத்திச் சென்ற நரசிம்மனை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆனால், மாணவி தனது 6 மாத ஆண் குழந்தையுடன் இருந்தார்.


இதையடுத்து குழந்தையுடன் மாணவியையும், நரசிம்மனையும் தர்மபுரிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், மாணவியை கடத்திய ஜிம் மாஸ்டர் நரசிம்மன் போலீசில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். அதுபற்றி போலீசார் கூறியதாவது: திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பத்தை சேர்ந்த நரசிம்மன்(26), கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜிம்மில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள். இந்நிலையில், கடந்த 2020 ஜூன் மாதத்தில், அவருக்கு இஸ்டாகிராம் மூலம் தர்மபுரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


ஷேர்சாட் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக நரசிம்மன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய மாணவியை, 2020 அக்டோபர் மாதம், மதிகோன்பாளையத்திற்கு பைக்கில் வந்த நரசிம்மன் கடத்திச் சென்றுள்ளார். தர்மபுரியில் இருந்து கோவை வழியாக கேரளா மாநிலம் திருச்சூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். வழியில் நரசிம்மன், மாணவிக்கு தாலிக்கட்டி திருமணம் செய்துள்ளார்.


ALSO READ | கெமிக்கல் நிறுவனத்தில் குளோரின் வாயு கசிவு - ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி


திருச்சூர், கொச்சியில் சில நாட்கள் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். பிறகு அங்கிருந்து பைக்கில், கர்நாடகா சென்றுள்ளார். அங்கு வேலை ஏதும் இல்லாததால், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சென்று, அங்கு சிறிது காலம் வாழ்ந்துள்ளனர். அப்போது மாணவி கர்ப்பமாகியுள்ளார். அந்த நேரத்தில், திருப்பதியில் உள்ள ஒரு வங்கியில், நகையை ₹70 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். அந்த பணம் செலவான நிலையில், திருப்பதியில் பல்வேறு இடங்களில் செல்போன் திருட்டில் நரசிம்மன் ஈடுபட்டுள்ளார். ஒருமுறை பைக் திருட்டில் ஈடுபட முயன்று, போலீசாரிடம் சிக்கியுள்ளார்.


பிறகு திருப்பதியில் அடகு வைத்திருந்த நகையை திருப்பிக் கொண்டு, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, விசாகபட்டினம் ஆகிய இடங்களில் சென்று இருவரும் தங்கியுள்ளனர். பின்னர், மாணவியின் பிரசவத்திற்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்துள்ளனர். பள்ளிக்கரணையில் தங்கியிருந்த போது, ஆன்லைன் மூலம் சூதாடுவதற்காக ஒரு கடையில் பண பரிவர்த்தனை செய்துள்ளார்.


பின்னர், அந்த கடை உரிமையாளரை நம்ப வைத்து, ₹1.2 லட்சம் மோசடி செய்துள்ளார். சென்னையில் மாணவி, ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்று நரசிம்மன் தங்கியுள்ளார். அங்கு பிழைக்க வழியில்லாததால், தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் இஸ்னாபூர் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.


இதனிடையே, திருப்பதியில் நகை அடகு வைத்தபோது கொடுத்த செல்போன் எண்ணை கொண்டு அவரை பின்தொடர்ந்தோம். அதன்மூலம் இஸ்னாபூரில் இருப்பதை அறிந்துக் கொண்டோம். அங்கு அவரை தேடிச் சென்றபோது தப்பிச் சென்றுவிட்டார். பிறகு சொந்த ஊரான பொம்மிகுப்பத்தில் மாணவியுடன் நரசிம்மன் தங்கியிருக்கும் தகவலை அறிந்து, அவரை அதிரடியாக பிடித்து கைது செய்தோம். மாணவியை 6 மாத குழந்தையுடன் மீட்டோம். 10ம் வகுப்பு மாணவியை கடத்தியபின், ஜிம் மாஸ்டர் நரசிம்மன் தனது கர்நாடக பதிவெண் கொண்ட பைக் மூலம் தொடர்ந்து சுற்றித்திரிந்தார். அந்த பைக்கில் தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மாணவியுடன் சென்றுள்ளார். அவர் சென்ற இடங்களில் எல்லாம், 3 நாட்கள் முதல் 20 நாட்களுக்கு மேல் தங்குவதில்லை.


ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து இடத்தை மாற்றிக் கொண்டே, மாணவியுடன் குடும்பம் நடத்தியுள்ளார். செலவிற்காக நரசிம்மன் இதுவரை 150 செல்போன் திருட்டிலும், ஒரு பைக் திருட்டிலும் ஈடுபட்டுள்ளார். நரசிம்மன் தனது பைக்கில் சென்ற இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி, அவரை பின்தொடர்ந்ததில் டோல்கேட் உள்ளிட்ட 30 இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தார்.


அந்த பதிவுகள் மற்றும் 150 சாட்சிகளிடம் விசாரித்து, இறுதியாக பொம்மிகுப்பத்தில் மடக்கி பிடித்து கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நரசிம்மனையும், மாணவியையும் தர்மபுரி மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்ற உத்தரவின்பேரில் மாணவியை குழந்தையுடன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். நரசிம்மனை தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.


* கர்நாடக பதிவெண் கொண்ட பைக்கில்தான், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய 5 மாநிலங்களுக்கு மாணவியுடன் சென்றுள்ளார்.


* மாணவியின் பிரசவத்திற்காக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வந்துள்ளனர். சென்னையில் மாணவி, ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்று நரசிம்மன் தங்கியுள்ளார்.


ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR