விஜய் கட்சியில் ஐக்கியமாகும் காளியம்மாள்? சீமான் கொடுத்த ரியாக்ஷன்
Kaliyammal, Seeman | நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி விஜய் கட்சியில் காளியம்மாள் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு சீமான் பதிலளித்துள்ளார்.
Kaliyammal, Seeman Latest News Tamil | நாம் தமிழர் கட்சியில் முக்கியமான முகமாக இருக்கும் காளியம்மாள் கடந்த சில மாதங்களாகவே சீமான் மீது உட்சபட்ச அதிருப்தியில் இருக்கிறார். சீமான் காளியம்மாளை வேண்டுமென்றே விலக்கி வைத்து வருவதால், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் எதிலும் பங்கெடுக்காமல் இருக்கிறார். ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்குள் நடந்த சில விவகாரங்கள் காரணமாக கோபத்தில் இருந்த காளியம்மாள், தன்னைப் பற்றி சீமான் பேசிய ஆடியோ வெளியானவுடன் அக்கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கு சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. அதற்கேற்றார்போல், நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காமலேயே இருந்தார். சீமானும் காளியம்மாள் குறித்து அந்த ஆடியோவில் பேசியது நான் தான் என்றும் வெளிப்படையாக சொன்னார்.
இதற்கு எந்த பதிலும் அளிக்காமல் அமைதி காத்த காளியம்மாள், யாராக இருந்தாலும் பெண்ணை இழித்து பேசுவது தவறு தான் என்று யூடியூப் பேட்டிகளில் கூறினார். மேலும், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதுவரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் தான் அவர் பயணிக்கிறார். ஆனால் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் நாம் தமிழர் கட்சியில் வகிக்கும் பொறுப்பை அவர் இப்போது பயன்படுத்துவதில்லை. நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளிலும் காளியம்மாளுக்கு அழைப்பு இல்லை என கூறப்படுகிறது. அதற்கேற்றார்போல் அண்மையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மகளிர் பாசறை நிகழ்ச்சியில் கூட மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான காளியம்மாள் பங்கேற்கவில்லை. அவர் இல்லாமலேயே இந்த கூட்டம் நடைபெற்று, மகளிர் பாசறைக்கு புதிய பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
அதனால், காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. எப்போது என்ற அறிவிப்பு மட்டுமே எஞ்சியிருக்கிறது என நாம் தமிழர் கட்சிக்குள் இருக்கும் சிலரே வெளிப்படையாக பேசிக் கொள்கின்றனர். இது ஒருபுறம் இருக்க காளியம்மாள் அதிமுக, பாஜக என ஏதேனும் ஒரு கட்சியில் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ற தகவல்களும் வெளியானது. ஆனால் அந்த கருத்தை காளியம்மாளே மறுத்துவிட்ட நிலையில், இப்போது புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் உலாவுகின்றன.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் காளியம்மாள் பேச்சுவார்த்தை நடத்திவிட்டதாகவும், விரைவில் தவெக கட்சியில் காளியம்மாள் இணைவது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாகும் என்றும் சிலர் புரளி கிளப்பிவிட்டுள்ளனர். ஆனால் காளியம்மாள் தரப்பில் இருந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியது குறித்தோ, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்தோ எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் இன்று பேசிய சீமானிடம், காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளதே என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், நாளைக்கு நான் கூட இணைவதாக செய்திகள் வரும் என கூறிவிட்டு, அடுத்த கேள்விக்கு சென்றார். ஆனால் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் உறுதியாக தொடருவார் என்ற பதிலை அவர் அளிக்கவில்லை.
மேலும் படிக்க | ஆதார் இணைத்தால் அரசு, தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும் - எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ