விஷச்சாராய விற்பனையை தடுக்க என்ன செய்தீர்கள்... தமிழக அரசிடம் உயர்நீதி மன்றம் கேள்வி..!!
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 30 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்துள்ளது; அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பணம் பெற்றுக் கொண்டு விஷச்சாராயத்தை விற்பனை செய்ய அனுமதித்துள்ளனர். சட்டவிரோத விற்பனை குறித்து பலமுறை புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றுவதில் பலனில்லை" என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் கேள்விகளை எழுப்புகையில், " தமிழக அரசின் சார்பாக, விஷச் சாராய விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? கடந்த 2023ம் ஆண்டு விஷச்சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டதை அடுத்து விஷச்சாராயத்தை ஒழிக்க கடந்த ஒரு வருடத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய விற்பனை தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில், அதனை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதற்கு முன்னரே விஷச்சாராய மரணம் நிகழ்ந்தும் ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? விஷச்சாராய விற்பனை தொடர்பாக அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பாலியாகியுள்ளதற்கு யார் பொறுப்பு?" என தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், "பொதுநல வழக்கு என்றுக்கூறி அரசியல் உள்நோக்கத்துடன் வாதம் முன்வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 போலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் தொடரும். அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் பாயும். விஷச்சாராய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 161 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று காலை நிலவரப்படி 47 பேர் உயிரிழந்துள்ளனர். 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 89 பேர்களின் உடல் நிலை சீராக உள்ளது. பணிகளை கண்காணிக்க கூடுதல் மருத்துவக்குழு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர்" என பதிலளித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் புதன்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்த்துள்ளனர். அதேபோல விழிப்புரம், மரக்காணம் சம்பவங்களுக்கு பிறகு விஷச்சாரய விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாகவும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க | தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்தது ஏன்? வரலாறும் பின்னணியும்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்திருக்கின்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பலர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 35 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் பெருமளவில் விற்பனை செய்யப்படு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ