தமிழக வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவரான கலைஞர் கருணாநிதியைக் கொண்டாட பல காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் முக்கியமான சிலவற்றைப் பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் ஊனமுற்றோர் என்ற வார்த்தையை மாற்றுத்திறனாளி எனவும், பல்வேறு இழிசொற்களால் அழைக்கப்பட்ட 3-ம் பாலினத்தவர்களை திருநங்கை எனவும் அழைக்க வைத்தவர் கருணாநிதி. இதில் என்ன பிரமாதம்.. வெறும் வார்த்தைகளை மாற்றுவதால் என்ன ஆகிவிடும் எனக் கேட்கலாம். அந்த வார்த்தைகள் ஏற்படுத்தும் வலி உணர்ந்தவர்களுக்கே புரியும். 


ஆனால், கலைஞர் கருணாநிதி வெறும் வார்த்தைகளோடு மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கட்டணங்கள் ரத்து, அரசு வேலையில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார்.



மேலும் இந்தியாவிலேயே முதன்முறையாக, 2008-ம் ஆண்டு திருநங்கைகளுக்கு நலவாரியத்தைக் கொண்டு வந்தார் கலைஞர் கருணாநிதி. கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட திருநங்கைகளின் கண்களில் இருந்து வந்த கண்ணீரே அதற்கு சாட்சி. 


மேலும் படிக்க | கலைஞர் கருணாநிதி - தமிழ்நாட்டுக்கு தலையெழுத்து எழுதிய தலைவன்!


அரசியல் கட்சி மட்டுமின்றி எந்த ஒரு அமைப்பின் உயிர்நாடியும் அதன் கொள்கை தான். காலப்போக்கில் அந்தக் கொள்கையை நேரடியாகக் கைவிட நேர்ந்தாலும், ஏதோ ஒரு ரூபத்தில் அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பதே காலத்தைக் கடந்து அந்த அமைப்பை வழிநடத்திச் செல்லும். தேர்தல் அரசியல் வேண்டாம் என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வந்த பெரியாரின் வழி வந்த பேரறிஞர் அண்ணா தேர்தல் அரசியல் நிலைப்பாட்டை எடுத்தார்.


பெரியார் கடவுள் மறுப்பாளர் ஆயினும், பேரறிஞர் அண்ணாவோ திருமூலரின் திருமந்திரத்தில் இருந்து ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற முழக்கத்தை முன்னெடுத்தார். இவை ஒன்றுக்கொன்று முரண் போலத் தோன்றினாலும் இரண்டிற்கும் அடிப்படை சமத்துவம் தான். இதேபோல, திராவிட நாடு என்ற முழக்கத்தைக் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, மாநில சுயாட்சிக்கு உரக்கக் குரல் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி. 



1969-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றபோது, மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்குத் தேவையான திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவருவது பற்றி ஆய்வு செய்ய பி.வி. ராஜமன்னார் ஆய்வுக்குழுவை அமைத்தார் கலைஞர் கருணாநிதி. இந்தக் குழுவின் அறிக்கை அடிப்படையில் 1974-ம் ஆண்டு தமிழக சட்டசபையில் மாநில சுயாட்சிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இதன் நீட்சியாக, கலைஞர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் சட்டத்தைக் கொண்டுவந்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இதனைத் தொடந்து, 1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கலைஞர் கருணாநிதி தேசியக் கொடி ஏற்றினார். தேசியக் கொடியை ஏற்றிய முதல் முதலமைச்சர் என்ற பெருமையும் கலைஞர் கருணாநிதியையே சேரும். 



அகில இந்திய அளவில் இட ஒதுக்கீட்டிற்கு வழிவகுத்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை வி.பி. சிங் தலைமையிலான மத்திய அரசு அமல்படுத்தியதில் கருணாநிதியின் பங்கு மிக முக்கியமானது. மண்டல் கமிசன் சிபாரிசினை ஏற்று மத்திய அரசு கல்வி வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்பட்டது. 


இதேபோல, 1971-ம் ஆண்டு வரை, தமிழ்நாட்டின் மொத்த இட ஒதுக்கீடு 41 சதவீதமாக இருந்தது. பின்னர் சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 25 சதவீதத்தில்  இருந்து 31 சதவீதமாகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தினார் கலைஞர் கருணாநிதி. இது மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீட்டை 49% ஆக உயர்த்தியது. 


மேலும் படிக்க | இந்தி திணிப்பை எதிர்ப்போம் - கலைஞர் சிலையில் இடம்பெற்றிருக்கும் மாஸ் கட்டளைகள்


இந்த ஒதுக்கீட்டு முறை பின் பல பரிமாணங்களைப் பெற்று தற்போது 69 சதவீத இட ஒதுக்கீடாக உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஜெனார்த்தனம் தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று அருந்ததியினருக்கு 3% உள் ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு என சமூக நீதியை நிலைநிறுத்தியதில் கலைஞருக்குப் பெரும் பங்கு உண்டு. 



1975-ம் ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் நெருக்கடி நிலை பிரகடனமானது. நாட்டிலேயே எமர்ஜென்சியை எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. இதற்கு பிரதிபலனாக தமிழகத்தில் நடைபெற்று வந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸுக்கு எமர்ஜென்சியின்போது அடைக்கலம் தந்தார் கருணாநிதி.   


பெண்ணுரிமைக்காகப் போராடிய பெரியார், 1929-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் செங்கல்பட்டில் நடந்த முதலாவது சுயமரியாதை மாநாட்டில், பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக சொத்துரிமை வழங்க வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். 


60 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி, பெரியார் கொள்கை வழியில், 1989-ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, பெண்களுக்கும் சொத்துகளில் சம உரிமை உண்டு’ என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டத்தை நிறைவேற்றினார். தமிழகத்தின் இந்தச் சட்டத்துக்குப் பின்னர், 16 ஆண்டுகள் கழித்து, 2005-ம் ஆண்டு தான் இந்திய அளவில் `பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு’ என்கிற சட்டம் கொண்டுவரப்பட்டது. 



1990-ம் ஆண்டிலிருந்து அரசுப் பதவிகளில் பெண்களுக்கு 30 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கியதோடு, 1973-ம் ஆண்டு நாட்டிலேயே  முதன்முறையாக காவல்துறையில் பெண்களை நியமனம் செய்யும் முறையைக் கொண்டு வந்தார். மேலும் நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். பெண்களின் முன்னேற்றத்திற்காக கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் பல.!  


மேலும் படிக்க | ‘பெரியார் சிந்தனைகள்’ - worldwide release will be soon.!


அனைத்து சாதியினரும் கோவில் கருவறைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கூறிவந்த பெரியார், 1970-ம் ஆண்டு போராட்டத்தை அறிவித்தார். அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று கூறியதை அடுத்து, பெரியார் போராட்டத்தை ஒத்தி வைத்தார். 


இதனைத் தொடர்ந்து, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க அனுமதிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1970-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், ஆகம விதிகளுக்கு உட்பட்டே அர்ச்சகர் நியமனம் நடைபெற வேண்டுமெனக் குறிப்பிட்டது. 



இதன் பிறகு இவ்விவகாரம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், 2002-ம் ஆண்டு கேரள நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், ஆகமங்கள், மதப் பழக்க வழக்கங்கள் போன்றவை அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிராக இருந்தால், அவை சட்ட ரீதியாகச் செல்லாது எனத் தீர்ப்பளித்தது.  


இதன் அடிப்படையில், 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டுவந்தது. இதன் அடிப்படையில், நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத் திட்டம்,  பூஜை முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்தது. இந்தப் பரிந்துரை அடிப்படையில் அர்ச்சகர்களுக்கான பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.


மேலும் படிக்க | பங்கேற்ற 13 தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே தீர்ப்பாக பெற்ற தலைவர் கருணாநிதி


ஆங்கிலத்தில் ஒருவர் மரணமடையும்போது Rest in Peace  எனக் கூறுவது உண்டு. ஆனால், கலைஞருக்கு இந்த வாசகத்தை Rest in Protest என்றுதான் மாற்றிக் கூற வேண்டும். வாழ்நாள் முழுவதும் பல போராட்டங்களைச் சந்தித்தவர், மரணத்திற்குப் பின்னும் நீதிமன்றத்தில் போராட வேண்டி இருந்தது. 


அண்ணாவிற்கு அருகிலேயே தனது சமாதி அமைய வேண்டும் எனக் கலைஞர் விரும்பிய நிலையில், அப்போதைய அதிமுக அரசு அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்க மறுத்தது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே, அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவையெல்லால் கலைஞரை நாம் கொண்டாட வேண்டிய காரணங்களில் சில.



95 ஆண்டுகால வாழ்வில் பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ்- தமிழர்- தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, தேர்தலில் எந்நாளும் தோல்வியையைச் சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் ஆட்சி செய்து, செயற்கரிய பல திட்டங்களை நிறைவேற்றி, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை முன்னேற்றம் காணச் செய்த இணையில்லாத் தலைவரை, மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த போராளியை நினைவு கூர்வோம். கலைஞர் கருணாநிதியின் நினைவைப் போற்றி புகழ் வணக்கம் செலுத்துவோம்.!


மேலும் படிக்க | கருணாநிதிக்கு பேனா சிலை... வாழ்வாதாரத்தை பாதிக்கும்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ