‘பெரியார் சிந்தனைகள்’ - worldwide release will be soon.!

பெரியாரின் சிந்தனைகளை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது.   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 18, 2022, 03:16 PM IST
  • உலகம் முழுக்க பெரியாரின் சிந்தனைகளைக் கொண்டு சேர்க்க நடவடிக்கை
  • இந்தியாவில் 21 மொழிகளில் பெரியார் சிந்தனைகளை மொழிப்பெயர்க்க திட்டம்
  • தமிழக பட்ஜெட்டில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு - மின்னூல் பதிப்புகளாகவும் வெளியீடு
‘பெரியார் சிந்தனைகள்’ - worldwide release will be soon.! title=

மேற்குலகில் சிக்மண்ட் ப்ராய்டின் தத்துவம் முதல் கார்ல் மார்க்ஸ்ஸின் ‘தாஸ் கேபிட்டல்’ வரை அனைத்தும் எந்த மொழியில் வேண்டுமானாலும் இப்போது படிக்கக் கிடைக்கிறது. அவர்களை உலகம் முழுக்க கொண்டுசேர்க்கும் பணியினை அந்தந்த நாடுகள் செவ்வனே செய்துமுடித்தன. அது ஏன் ?. இப்போதும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு முக்கியமான அரசியல் புத்தகமோ அல்லது நாவலோ வெளியானால் அடுத்த சில மாதங்களில் தமிழில் அது மொழிபெயர்க்கப்பட்டு நமக்கு வாசிக்கக் கிடைக்கிறது. அதுபோல நம் ஆளுமைகளை நாம் உலகளவில் எடுத்துச்செல்லும் பணிகளை மேற்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி பல ஆண்டுகளாக தமிழ் அறிஞர்கள் முன்வைத்து வருகின்றனர். நிதிப் பற்றாக்குறை என்ற காரணத்தை மட்டும் இதற்குப் பதிலாகச் சொல்லிவிடமுடியுமா ?. உலகளவில் நோபல் வாங்கும் அளவுக்கு தகுதி கொண்ட சிறுகதைகளையும், நாவல்களையும், ஆய்வுநூல்களையும், அரசியல் தத்துவங்களையும் எழுதியுள்ள மாபெரும் மேதைகளும், ஆளுமைகளும் உலவிய தமிழ்மண்ணில் ஒருவர்கூட வெளி உலகத்துக்கு தெரியவே தெரியாத ஒரு அவல நிலை இன்னும் நீடித்து வருகிறது. உலகின் தலைசிறந்த ‘க்ளாசிக்குகளை’ நம் தமிழ் ஆளுமைகள் தமிழில் மொழிபெயர்த்து சாதனை படைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த ‘க்ளாசிக்குகளுக்கு’ சற்றும் குறையில்லாத நம் தமிழக ஆளுமைகளின் படைப்புகள் ஏன் உலகளவுக்குச் செல்லவில்லை.?

மேலும் படிக்க | கடவுள் எதிர்ப்பா பெரியார் கொள்கை? வைரலாகும் ஜீ தமிழ் நிகழ்ச்சி

ரஷ்யப் புரட்சியை இந்தியாவிலேயே முதல்முதலாக பதிவு செய்த அறிவுச்சூழல், தமிழக மண்ணிற்கு உண்டு. ரஷ்யாவில் இப்படியொரு புரட்சி நடைபெற்றிருக்கிறது என்பதை இந்தியாவிற்கே நம் பாரதிதான் முதல்முதலில் பதிவு செய்திருக்கிறான் என்பது வரலாறு. வட மாநிலத்தில் உள்ள தாகூரை உலகம் அறியும். அவருக்கு சற்றும் குறைவில்லாத நம் பாரதியை தமிழ்நாட்டைத் தாண்டி யாருக்குத் தெரியும். காரணம் என்ன ? தாகூரின் படைப்புகளை உலகம் முழுக்கக் கொண்டு சேர்க்கும் மொழிப்பெயர்ப்பு பணிகளை அம்மாநில அரசு மேற்கொண்டது. பாரதியாரின் படைப்புகள் உலகளவில் எடுத்துச்செல்லும் பணி இன்னும் தேக்கமடைந்துள்ளன. பெரும்பாலான அவரது கவிதைகள் இன்னும் பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கின்றன. பாரதிக்குப் பிறகு வந்த அத்தனை தமிழ் ஆளுமைகளின் நிலைமையும் இதுதான்.! வெகுநாட்களாகவே இந்தச் சூழல் தமிழ் அறிவுஜீவி வட்டத்தில் இருந்தவண்ணம் உள்ளன. எங்கோ மூலையில் ஒளித்துக்கொண்டிருந்த இந்த ‘குரல்கள்’, தற்போது மெல்ல தமிழக அரசின் காதுகளில் விழுந்திருக்கிறது. 

மேலும் படிக்க | சமூக நீதி நாள்! பெரியாரின் தேவை என்ன?!

தமிழ்நாட்டில் சமூகநீதி, சாதிய பாகுபாடுகள், மத அமைப்பியல், பெண்ணடிமைத்தனம், சமத்துவத்திற்கான சிந்தனை, ஆண்-பெண் உறவு சிக்கல்கள், கலாச்சாரம் குறித்த பார்வை, ஒழுக்கம், மனித வாழ்விற்கான மேம்பாடு என்று பல்வேறு தளத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குரல் கொடுத்தும், எழுதியும் வந்தவர் ஈ.வே.ராமசாமி என்ற பெயர் கொண்ட பெரியார்.! இந்தியாவின் பிற மாநிலங்களில் இந்த அமைப்பியல் சார்ந்த பார்வைகளும், சிந்தனைகளும் அரசியல் ரீதியாக இப்போதுதான் மெல்ல எழுந்துவரும் காலத்தில் இதையெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் சாகும்வரை தொண்டைக்கிழிய பேசிக்கொண்டிருந்தார் என்ற பெருமை மட்டும் தமிழ்ச்சமூகத்துக்கு போதுமா?!.  இன்னும் பெரியாரின் தத்துவங்களும், சிந்தனைகளும், எழுத்துகளும் காலாவதியாகாமல் இப்போதும் தேவைப்படுகின்றதென்றால் அதன் வீச்சு எவ்வளவு வீரியம் மிக்கதாக இருக்க வேண்டும். பெரியாரின் சிந்தனைகள் வெறும் தமிழக மக்களுக்காகனவை என்று சுருக்கியதன் விளைவுதான் இன்னும் அவர் வெளியே செல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழறிஞர்கள் புலம்புகின்றனர். ‘இந்தியாவின் பிற மாநிலங்களில் தற்போது உருவாகி வரும் புதிய ஆளுமைகள் பெரியார் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் ; புத்தகம் கொடுங்கள்’ என்று கேட்டால், தமிழ்ப் புத்தங்களைத் தவிர எதுவுமே இல்லை என்று சமீபத்தில் தமிழக பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் குறிப்பிட்டு வேதனை தெரிவித்திருந்தார். இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக, தற்போது தமிழக அரசு ஓர் அடியை எடுத்து முன்வைத்திருக்கிறது. 

Image Of Periyar

2022-2023ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், பெரியாரின் சிந்தனைகளை உலகளவுக்கு கொண்டுசெல்லும் நடவடிக்கையில் புதிய திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரியாரின் சமூக நீதி கருத்துகள் மற்றும் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பை இந்தியா முழுவதும் எடுத்துச்செல்லும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 21 இந்திய மொழிகளில் பெரியாரின் சிந்தனைகள் மொழிபெயர்க்கப்பட உள்ளன. அதுமட்டுமல்லாமல், உலக மொழிகளில் சிலவற்றிலும் அச்சு மற்றும்  மின்னூல் பதிப்புகளாக பெரியாரின் சிந்தனைகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முயற்சிக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். மேற்குலகில் உருவாகும் தத்துவத்தின் வடிவங்களான எல்லா ‘இஸங்களும்’ தமிழ்நாட்டில் இறக்குமதியாகும்போது, இங்கிருந்து ‘பெரியாரிஸம்’ என்னும் தத்துவம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் காலம் வெகுதொலைவில் இல்லை.! இந்த ஆரோக்கியமான முயற்சி, பெரியாரோடு நின்றுவிடாமல் இன்னும் பல ஆளுமைகளின் படைப்புகள் மற்றும் சிந்தனைகளின் மீதும்   ‘பாரபட்சமில்லாமல்’ உற்றுநோக்குமா தமிழக அரசு ?!

மேலும் படிக்க | பெரியார் சிலைக்கு செருப்பு மாலை! கோவையில் பரபரப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News