கிருஷ்ணா நதி நீர் விவகாரம்: தமிழக அரசு ஆந்திர முதல்வரை சந்தித்து பேச வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னையைப் போக்க, கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தில் ஆந்திர முதல்வரை சந்தித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதைக்குறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சென்னை மாநகரம் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மாதக்கணக்கில் குடிநீர் விநியோகிக்கப் படுவதில்லை. ஒருசில பகுதிகளில் குழாய்களில் வரும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. சென்னைக்கு குடிநீர் தரும் பிரதான ஏரிகளில் தண்ணீர் இல்லாத நிலையில், கல்குவாரிகளை தேடி அலையும் அவல நிலையை இந்த அதிமுக அரசு ஏற்படுத்தி விட்டது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீஞ்சூர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வடசென்னை பகுதியிலும், நெம்மேலியில் துவங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தென்சென்னை பகுதியிலும், குடிநீர் பிரச்னை யை தீர்க்க ஓரளவு கை கொடுத்துக் கொண்டிருக்கின்றன என்பது ஆறுதலான செய்தியாக இருந்தாலும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர் கட்சியாக இருந்தாலும் இன்றைக்கு ஆளுங்கட்சி செய்ய வேண்டிய பணிகளை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு, நேற்று மட்டும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 16 குளங்கள் மற்றும் 2 ஏரிகள் தூர்வாரப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து உள்ளேன். குறிப்பாக வந்தவாசி மும்முனி குளம் தூர்வாரம்போது, நீரூற்று ஏற்பட்டதன் காரணமாக அந்தப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் அளவிற்கு அது பயன்பட்டு வருகிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு, 16.4.2013 அன்று நெம்மேலியில் 1371 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிடப் பட்டது. அதேபோல், சென்னை அருகில் உள்ள போரூரில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களும் இதுவரை நிறை வேற்றப் படவில்லை. ஆந்திர மாநில அரசுடன் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரையும் பெற முடியவில்லை.
சென்னை மாநகருக்கு குடிநீர் தரும் ஏரிகளை ஆழப்படுத்தி, மழை வெள்ளத்தில் கடலில் கலந்த வெள்ளநீரை சேமித்து வைக்கவும் இந்த ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவை பற்றியே துளியும் கவலைப் படாமல் தூங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசின் பொறுப்பற்ற செயலால், இன்றைக்கு சென்னை மாநகர மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. எங்கு பார்த்தாலும் டெங்கு போன்ற நோய்கள் பரவிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், பாதுகாப்பான குடிநீர் இல்லாமல் சென்னை மாநகர மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக ஆட்சியை ‘அறிவிப்பு அரசு’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வருகிறோம். “110 அறிவிப்புகளில் சொன்னதை செய்திருக்கிறீர்களா என்பது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள்”, என்று எத்தனையோ முறை வாதாடி இருக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டதொடரில் கூட, “110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகளை எல்லாம் உறுதிமொழிக் குழுவிற்கு அனுப்பி வையுங்கள்”, என்ற கோரிக்கையை சட்டமன்றத்தில் நானே வைத்தேன். அப்போது பதிலளித்த முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, "110-வது விதியில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் எல்லாம் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன. அதற்கு ஆதாரங்கள் இருக்கிறது", என்றார்.
ஆனால், இப்போது இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் (சி.ஏ.ஜி) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமநாதபுரம் குதிரைமொழி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி ஆழந்தலை கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஆகிய இரு திட்டங்களுக்காகவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாய் செலவழிக்கப் படாமல் சரண்டர் செய்யப் பட்டுள்ளது", என்ற அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளார். இந்த இரு திட்டங்களும் 10.4.2013 அன்று 110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்.
ஆகவே, சென்னை மாநகரத்தில் மட்டுமல்ல, தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு எவ்வித ஆர்வமோ, ஆக்கபூர்வமான முயற்சியோ இல்லை. அதைவிட, "110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்பட்டுள்ளன", என்று முதலமைச்சர் அப்பட்டமான பொய்யை சட்டமன்றத்திலேயே சொல்லி இருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது.
எனவே, இனியும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்காமல், உடனடியாக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு அவர்களை சந்தித்து, சென்னை மாநகருக்கு கிடைக்க வேண்டிய கிருஷ்ணா நதி நீரை உடனடியாகப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகர மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண, லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, சென்னை மாநகர மக்களுக்கு லாரிகளில் வழங்கப்படும் குடிநீருக்கான கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.