கல்பாக்கம் பகுதியில் 14 கிராமங்களில் நிலப்பதிவு தடையை நீக்க வேண்டும் - PMK
கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், (Mamallapuram) சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு (Central government) நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!
கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், (Mamallapuram) சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு (Central government) நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!
இது குறித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.. " கல்பாக்கம் (Kalpakkam) அணு மின்நிலையத்தைச் சுற்றியுள்ள 14 கிராமங்களில் நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ கூடாது என்றும், அப்பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு (Registration) செய்ய தடை விதிக்கப் பட்டிருப்பதாகவும் வெளியாகிவரும் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இந்நடவடிக்கை அந்த கிராமங்களில் வாழும் மக்களின் பொருளாதாரத்தை முடக்கும் என்பதால் இதை ஏற்கவே முடியாது.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணுமின்நிலையம் அமைந்துள்ளது. அந்த அணுமின்நிலையத்தைச் சுற்றிலும் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், கல்பாக்கம், மணமை, குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமைப்பாக்கம், நெல்லுர், விட்டிலாபுரம் ஆகிய 14 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன; பல்லாயிரக்கணக்கான வீட்டுமனைகளும் உள்ளன. இந்த மக்களின் வாழ்க்கையும், வாழ்வாதாரம் சார்ந்த நிகழ்வுகளும் சரியாக சென்று கொண்டிருந்த சூழலில் தான், இந்த 14 கிராமங்களிலும் உள்ள எந்த வகை நிலங்களையும் பத்திரப் பதிவு செய்வதற்கு மத்திய அரசு தடையாணை பிறப்பித்துள்ளது.
ALSO READ | OBC இட ஒதுக்கீடு மீண்டும் மறுக்கப்படுவது மாபெரும் அநீதி - PMK
இதற்காக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ள காரணம் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். கல்பாக்கம் அணுமின்நிலையத்திலிருந்து அணுக்கதிர் வீச்சு ஏற்படும் போது, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள மக்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே அந்தப் பகுதியில் நிலங்களை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 1983-ஆம் ஆண்டில் கல்பாக்கம் அணுமின்நிலையம் செயல்படத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான சுமார் 40 ஆண்டுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை. இன்று வரை அணுமின்நிலையத்திலிருந்து கதிர்வீச்சு ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இத்தகைய சூழலில் இப்படி ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பொதுமக்களின் நிலங்களை விற்க முடியாத சூழலை ஏற்படுத்த மத்திய அரசு முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அனுமின்நிலையங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அது உண்மை என்றால், 14 கிராமங்களில் நிலங்களை வாங்கவும், விற்கவும் கதிர்வீச்சு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி தடை விதிப்பது பெருந்தவறு ஆகும். ஒருவேளை உண்மையாகவே கதிர்வீச்சு அச்சம் உள்ளதென்றால், தடை விதிக்கவேண்டியது அப்பாவி மக்களின் நில விற்பனைக்கு அல்ல... மாறாக, கல்பாக்கம் அணுமின்நிலையம் இயங்குவதற்கு தான். இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இல்லாத அச்சத்தைக் காட்டி அப்பாவி மக்களின் நிலங்களின் மதிப்பை சீர்குலைக்க முயலக் கூடாது.
மத்திய அரசால் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள 14 கிராமங்களில் வாழ்பவர்களும், நிலம் வைத்திருப்பவர்களும் கோடீஸ்வரர்களோ, நிலச்சுவான்தாரர்களோ அல்ல. அவர்கள் மிகச்சிறிய அளவில் நிலம் வைத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆவர். அவர்கள் தங்களது பிள்ளைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட தேவைகளுக்காக பெரிதும் நம்பியிருப்பது நிலங்களைத் தான். நிலங்களை விற்றுத் தான் தங்கள் குடும்பத்தின் செலவுகளை சமாளித்து வந்தனர். இத்தகைய சூழலில் நிலங்களை விற்பனை செய்ய தடை விதித்திருப்பதன் மூலம், அந்த மக்கள் மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். இதை சரி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
எனவே, கல்பாக்கம் பகுதியில் மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம் உள்ளிட்ட 14 கிராமங்களில் நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மத்திய அரசு நீக்க வேண்டும். அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையையும் மத்திய அரசு போக்க வேண்டும்.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR