Ration Card: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
Ration Card: தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் சக்கரபாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளில் போதிய அளவு துவரம் பருப்பு இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் தற்போது ரேஷன் கடைகளில் அனைவருக்கும் தேவையான அளவு துவரம் பருப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றும், பற்றாக்குறையே இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2.25 கோடி குடும்பங்களுக்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை வழங்கி அரசு உதவி செய்து வருகிறது. ஒவ்வொரு குடும்பமும் 1 கிலோகிராம் துவரம் பருப்பை ஒவ்வொரு மாதமும் வெறும் 30 ரூபாய்க்கு பெறலாம். மேலும் ஒரு லிட்டர் பாமாயிலை 25 ரூபாய்க்கு வாங்கலாம்.
மேலும் படிக்க | மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்? ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் காத்திருப்பு..
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் துவரம் பருப்பு கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் நவம்பர் மாதத்துக்கான பருப்பு இன்னும் கொடுக்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சனை சென்னையில் மட்டுமல்ல என்றும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் பருப்பு விநியோகிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு ஒதுக்கீடு குடும்ப அட்டைதாரர்களுக்கு துரிதமாக தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 நவம்பர் 2024 (நேற்று) வரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை மண்டலங்களை பொறுத்தவரை, மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு 14,75,019 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் சேர்த்து 87% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமன்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது.
தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை, எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ