Lok Sabha Elections 2024 : நாடாளுமன்ற தேர்தல் இம்மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். அவர் முழுமையாக அறிக்கையில் கூறியுள்ள விவரங்கள், இதோ:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மு.க.ஸ்டாலின் அறிக்கை:


“53 ஆயிரம் தொகுப்பூதிய ஆசிரியர்களை காலமுறை ஊதியத்திற்குக் கொண்டு வந்தது; அரசு ஊழியர்கள் இறந்து போனால் கருணை அடிப்படையில் குடும்ப நல நிதி வழங்கியது; ஊதியக் குழு மாற்றத்தைப் பலமுறை கொண்டு வந்தது; அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி விட்டுப் போன அகவிலைப்படி உயர்வினையும் சேர்த்து 2021-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும் ஒரே நேரத்தில் 14 விழுக்காடு வழங்கியது என நமது சாதனைகளைப் பட்டியலிடத் தொடங்கினால் நாளும் பொழுதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம்!


கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கஜானாவைத் தூர்வாரி மாநிலத்தைக் கடும் நிதி நெருக்கடியில் விட்டுவிட்டுச் சென்றார்கள். இந்தச் சூழலிலும் இன்றைக்கு ஒன்றிய அரசுக்கு  இணையான - ஒன்றிய அரசு உயர்த்துகிற அகவிலைபடி உயர்வை  அப்படியே வழங்கி வருகிறது நமது அரசு”


ஆசிரியர்களுக்கான ஊதியம்:


“அரசு ஊழியர்கள் இறந்து போனால் வழங்கப்பட்டு வந்த மூன்று லட்ச ரூபாய் குடும்பநல நிதியை தற்போது  5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கி இருக்கிறோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர் - அரசு ஊழியர்கள் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ போராடியபோது, போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளான  வழக்குகள், துறைரீதியான நடவடிக்கைகள் இவற்றையெல்லாம் ரத்து செய்து, போராடிய காலத்தைப் பணிக்காலமாகக் கருதி, தேர்தல் அறிக்கையில் சொன்னபடி ஊதியத்தை வழங்கி இருக்கிறோம்.


நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையான, தொடக்கக் கல்வித்துறையைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, தொடக்கக் கல்வித் துறையைப் பள்ளிக்கல்வித் துறையிடமிருந்து பிரித்துத் தனியாகச் செயல்பட ஆணை பிறப்பித்து இருக்கிறோம். 


இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்குக் கைக்கணிணி வழங்கும் திட்டம் செயல்படுத்தியது, ஆசிரியர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்கு 10 ஆயிரம் ரூபாயாக இருந்த நிதியை 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை மேற்கொள்வது, கனவு ஆசிரியர் விருது வழங்கி கௌரவித்தது, அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்குவது, ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருப்பதை உறுதி செய்வது, 2800 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்தது,  பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்குக் கடுமையான நிதிநிலை நெருக்கடியையும் கடந்து 2500 ரூபாய் ஊதியத்தை உயர்த்தி வழங்கியது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காகப் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ரூபாய் 5000 தொகுப்பூதியத்தை உயர்த்தி வழங்கியது என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம்”


எஸ்மா, டெஸ்மா வழக்குகள்:


“எஸ்மா - டெஸ்மா கொண்டு வந்து நள்ளிரவில் அரசு ஊழியர்களைக் கைது செய்ததும் - அடக்குமுறை செய்ததும்தானே அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோலம். அந்த எஸ்மா, டெஸ்மா வழக்குகளை ரத்து செய்து, அரசு ஊழியர்களின் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்பது வரலாறு.


இந்தியாவிலேயே முதன்முதலாகப் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது அ.தி.மு.க. ஆட்சி. இப்படிப்பட்ட அரசு ஊழியர் விரோத ஆட்சி நடத்திவிட்டு உத்தமபுத்திரன் போல் பேச பழனிசாமிக்கு என்ன அருகதை இருக்கிறது?


மேலும் படிக்க | சின்னத்தை மறந்து தேர்தல் பிராசாரத்தில் உளறிய பிரேமலதா விஜயகாந்த்!


ஆட்சியில் இருந்தபோது பழனிசாமிதானே அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வினை முடக்கி வைத்து விட்டுப் போனார். ஆசிரியர்கள் பெற்று வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய முறையை ரத்து செய்து விட்டுப் போனார்? இன்று அவர் வடிக்கும் நீலிக்கண்ணீருக்குப் பின்னால் அதிகாரப் பசியும் – துரோகத்தின் ருசியும்தான் இருக்கிறதே தவிரே; அரசு ஊழியர்களின் மீதான அக்கறை எள்முனையளவும் இல்லை”


“உங்களுடைய அத்தனை கோரிக்கைகளையும் அச்சுப்பிசகாமல் நிறைவேற்றி தருவேன்” என்ற உறுதியை அவர்களை நேரில் அழைத்துப் பேசிச் சொல்லியிருக்கிறேன்.


இதெல்லாம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது பொது வாழ்க்கை நடவடிக்கையில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்ட பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பில்லை. எனவே, தி.மு.க.வின் சாதனைகளை மறைக்க அவர் போடும் வேடம் – பகல் வேடமாகவே கலைந்து போகும் என்பது மட்டும் நிச்சயம்.


அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்…


“நிச்சயம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாம் விரும்பும் மாற்றம் வந்தவுடன்- தமிழ்நாட்டின் நிதிநிலை விரைவில் சீராகும். அப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எஞ்சியுள்ள அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும்.


எனவே, “திராவிட மாடல் அரசுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனது இருக்கிறது. மார்க்கமும் விரைவில் வரும்” என்பதை உணர்ந்துள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நல்லதொரு மாற்றம் ஏற்பட நமது இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”


மேலும் படிக்க | காங்கிரசின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் செயல்: நடிகை குஷ்பூ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ