மக்கள் நீதி மய்யம் சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் வருகிற 8-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்குகிறார். மேலும் கூட்டத்தில் பங்கேற்கும் பெண்களிடம், அவர் கலந்துரையாடல் செய்கிறார். அப்போது பெண்கள் கேட்கும், கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளிக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகளிர் தின கூட்டத்துக்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யத்தினர் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையே மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு பெண்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினர்களும், பேச்சாளர்களுமான ஸ்ரீப்ரியா ராஜ்குமார், கமீலா நாசர் ஆகியோர் அழைப்பு விடுத்த வீடியோ காட்சிகளையும் வெளியிட்டனர். மேலும் கமல்ஹாசனிடம் கேட்க விரும்பும் கேள்விகளை இ-மெயில் முகவரி மூலம் அனுப்பலாம் என்றும் அந்த வீடியோவில் அவர்கள் கூறியிருந்தனர்.


மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை மற்றொருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தின் வெளியே உறுப்பினர் சேர்க்கை அரங்கு நேற்று திறக்கப்பட்டது. அங்கு கட்சியில் சேர விரும்புபவர்களுக்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டது. சிலர் அங்கேயே பூர்த்தி செய்து கொடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராகினர்.


மாவட்ட பொறுப்பாளர்களுடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்துக்கு பின்னர் கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர் படிவங்கள் மாவட்ட வாரியாக பிரித்து கொடுக்கப்பட உள்ளது. 


இதற்காக மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.