வருகிறது `இலக்கிய சங்கமம்` - இலக்கிய, திரைப்பட ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து
Chennai Sangamam 2023: சென்னை சங்கமத்தின் ஓர் அங்கமாக இலக்கிய சங்கமம் விழா பொங்கல் பண்டிகையையொட்டி நான்கு நாள்கள் நடைபெற உள்ளது. இதன் நிகழ்ச்சி நிரல்கள் குறித்த முழு தகவல்களையும் இத்தொகுப்பில் காணலாம்.
தற்போதைய ஜனவரி மாதம் அறிவுசார் சமூகத்தின் கொண்டாட்ட காலகட்டமாக திகழ்கிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், ஜன. 6ஆம் தேதி புத்தக கண்காட்சி தொடங்கிய நிலையில், பொங்கல் விடுமுறையையும் தாண்டி ஜன. 22ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. அதேவேளையில் கோடூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை இலக்கிய திருவிழா ஜன. 6,7,8 தேதிகளில் நடைபெற்று முடிந்தது.
தொடர்ந்து, 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' என்ற பெயரில் சென்னை நகரில் சுமார் 16 இடங்களில், பிரம்மாண்ட கலை விழாக்கள் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளின் தொடக்கவிழா வரும் ஜன.13ஆம் தேதி, தீவுத்திடலில் நடைபெற இருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் விழாவை தொடக்கிவைக்க உள்ளார்.
அந்த வகையில், செனைனை சங்கமத்தின் ஓர் அங்கமாய் இலக்கியச் சங்கமம் என்ற பெயரிலும் விழா நடைபெற உள்ளது. இந்த இலக்கிய சங்கமத்தில் இலக்கிய ரீதியிலான கருத்தரங்கம், விவாதமேடை, கவியரங்கம், கதை சொல்லல் என நான்கு நாள் (ஜன. 14, 15, 16, 17) நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இலக்கிய சங்கமம் நிகழ்வு சென்னை அடையாறில் உள்ள ராஜரத்தினம் அரங்கத்தின் முத்தமிழ்ப் பேரவையில் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | 'தமிழ்நாடு' பெயரில் இவர்களுக்கு என்ன பிரச்னை...? - ஆளுநர் மீது அமைச்சர் அட்டாக்!
தொடக்க விழா:
ஜன. 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இதன் தொடக்க விழாவில், மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைக்கிறார். தமிழ்நாடு கலை பண்பாடு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடக்க விழாவுக்கு தலைமை ஏற்கிறார். இந்த நிகழ்ச்சியில், எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி., முன்னாள் துணைவேந்தர் ம. ராஜேந்திரன், எழுத்தாளும், எம்.பியுமான சு.வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
ஜன. 14ஆம் தேதி நிகழ்வு:
இதையடுத்து, ஜன. 15ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு எழுத்தாளர் பவா செல்லதுரையின் 'பெருங்கதையாடல்' நிகழ்வு நடைபெறுகிறது. இதில், எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை நாவலை பவா செல்லத்துரை விவரிக்க உள்ளார். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 'மாற்று சினிமா குறித்து யோசிப்போம்' என்று அமர்வு நடைபெறுகிறது. இந்த அமர்வுக்கு படத்தொகுப்பாளரும், இயக்குனருமான பீ.லெனின் தலைமையேற்கிறார். அந்த அமர்வில், இயக்குநர்கள் ராஜேஸ்வர், பி.சி.ஸ்ரீராம், மிஷ்கின், டி.ஜெ. ஞானவேல், தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
ஜன. 16ஆம் தேதி நிகழ்வு:
'திராவிட இயக்க இலக்கிய இயல் குரித்து கல்லூரி மாணவர்களோடு ஓர் உரையாடல்' என்ற அமர்வு ஜன. 16ஆம் தேதி, (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் திட்டக்குழுத துணைத் தலைவர், ஜெ. ஜெயரஞ்சன் இந்த அமர்வுக்கு தலைமையேற்கிறார். இதில், க. திருநாவுக்கரசு, ஏ.எஸ். பன்னீர்செல்வன், எழுத்தாளர் இமையம், பேராசிரியர் அ.ராமசாமி, ந. முருகேச பாண்டியன், அறிவுமதி, கோவி லெனின், சந்தியா நடராஜன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
தொடர்ந்து, மாலை 6 அணிக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமையில் 'நாவல் கருத்தரங்கம்' நடைபெறுகிறது. இதில், எழுத்தாளர்கள் திலகவதி, ஜோ டி குரூஸ், சு. வேணுகோபால், பா. வெங்கடேசன், முத்துநாகு, கோபாலகிருஷ்ணன், அ. வெண்ணிலா ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.
கவிதை வாசிப்பு அமர்வு
கடைசி நாளான ஜன. 17ஆம் தேதி, 'நூறு பூக்கள் மலரட்டும்' கவியரங்கம் நடைபெற இருக்கிறது. இந்த கவியரங்கத்தை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைக்க உள்ளார். இதில், கலாப்ரியா தலைமையேற்கிறார். டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். தொடர்ந்து, கவிதை இயல் குறித்து சேலம் ஆர். குப்புசாமி உரையாற்றுகிறார்.
உரையை தொடர்ந்து, பல கவிஞர்கள் கவிதை வாசிப்பில் ஈடுபட உள்ளனர். கவியரங்க நெறியாள்கையை தேவேந்திர பூபதி கையாள்கிறார். இதையடுத்து, மாலை 6 மணிக்கு இறுதி நிகழ்ச்சியாக சென்னை கலைக்குழு வழங்கும் "கனவுகள் கற்பிதங்கள்" நாடகம் மற்றும் நடிகர் ரோகிணி நடிக்கும் "வீழோம்" ஓராள் நாடகமும் நடைபெற உள்ளது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் கேரட் (Carrot) நிறுவனம் ஒருங்கிணைக்கும் நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | திராவிடர்கள் இல்லை; உண்மையான சமூக நீதி காவலர் நிதிஷ்குமார்தான் - சீமான் புகழாரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ