DMK Minister Raja Kannappan Election Campaign Video Viral: இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என நாடே களைகட்டியுள்ளது. தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக ஏணி சின்னத்தில் 'சிட்டிங் எம்பி நவாஸ் கனி' போட்டியிடுகிறார்.


இவருக்கு ஆதரவாக நேற்று இரவு ஏர்வாடி தர்கா முன்பு பரப்புரையில் ஈடுபட்டபோது, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு மாலை அணிவிக்க ஆர்வத்தில் ஒரு தொண்டர் வாகனத்தில் ஏறினார். அமைச்சர் அந்த தொண்டரை தலையில் அடித்து 'இறங்குடா கீழே' என அதட்டலாக கூறி இறக்கிவிட்ட சம்பவம் திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஜாதியை சொல்லி இழிவாகப் பேசுவது, பொதுவெளியில் அநாகரிமாக நடந்து கொள்வது என, சர்ச்சைகளுக்கு பெயர் போன அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடும் முகம் சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | பாஜக ஆட்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை -அமைச்சர் மனோ தங்கராஜ்


தேர்தல் பரப்புரையின் போது தங்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு தொண்டர்கள் சால்வை அணிவிப்பதும், மாலை அணிவித்து வரவேற்பது மரியாதை செய்வதும் வழக்கம். ஆனால் இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ராஜகண்ணப்பனின் இந்த செயலானது அருவருக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. தங்கள் கட்சியின்  வெற்றிக்காக பாடுபடும் கடைகோடியில் இருக்கும் தொண்டர்களுக்கு எந்த சலுகையும் செய்யாத திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், ஆர்வத்தில் மாலை அணிவிக்க வாகனத்தின் மேலே ஏறிய தொண்டர் ஒருவரை அடித்து இறக்கி கீழே தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி அருவருப்பை ஏற்படுத்தி உள்ளது.