நிரந்தர முகவரியுடன் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி முகவரியுடன் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் வழங்கத் தடை கோரிய மனுவுக்கு மத்திய, மாநில அரசுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மத்திய அரசின் மென்பொருள் மூலம் ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமங்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.


ஓட்டுனர் உரிமம் விண்ணப்பவர்கள் நிரந்தர முகவரிக்கான அனைத்து ஆவணங்களையும் வழங்கியும் இந்த ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமங்களில் நிரந்தர முகவரி இடம்பெறுவதில்லை. மாறாக தற்காலிக முகவரி மட்டும் குறிப்பிட்டு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் முகவரி மட்டும் பதிவிடப்பட்டு அளிக்கப்படுகிறது.


ஓட்டுனர் உரிமத்தில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளின் முகவரியை குறிப்பிடத் தடை கோரி தென்னிந்திய ஓட்டுனர் பள்ளி உரிமையாளர்களின் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் தேவதாஸ் காந்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


இந்தியா முழுவதும் பயன்படுத்தும் வகையிலான ஸ்மார்ட் ஓட்டுனர் உரிமம் முதல்கட்டமாக சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் மத்திய அரசு மென்பொருள் மூலம் வழங்கப்படுவதாக மனுதாரர் தெரிவித்திருந்தார். விண்ணப்பிக்கும்போது நிரந்தர முகவரி ஆவணங்களை வழங்கினாலும் உரிமங்களில் நிரந்தர முகவரி இடம்பெறுவதில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.


ஓட்டுனர்களின் சட்டப்படியான சான்று ஆவணமான ஓட்டுனர் உரிமத்தில் தற்காலிக முகவரி, ஓட்டுனர் பயிற்சி பள்ளி முகவரி மட்டும் இடம்பெறுவதால் குழப்பம் ஏற்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.