மரணம் பிரித்த மனைவியை சிலையாய் மீட்ட கணவர்: காதல் பிரியாதது!!
தமிழ்நாட்டில் மதுரையைச் சேர்ந்த ஒரு 74 வயதான வணிகர், தனது மறைந்த மனைவியின் உருவச் சிலையை சிலையை தனது வீட்டில் நிறுவியுள்ளார்.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’… ஆம்! ஆனால் அந்த வரம் கை நழுவிப் போனால், அதனால் வரும் துக்கம் கணவனை பாடாய் படுத்துகிறது. அந்த துக்கத்திலிருந்து நிரந்தரமாக மீள வழி இல்லை என்றாலும், பலர் பல தற்காலிக வழிகளைத் தேடித்தான் கொள்கிறார்கள். அப்படி ஒருவர் கண்டறிந்த ஒரு வழியை இன்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் (Tamil Nadu) மதுரையைச் சேர்ந்த ஒரு 74 வயதான வணிகர், தனது மறைந்த மனைவியின் உருவச் சிலையை சிலையை தனது வீட்டில் நிறுவியுள்ளார். தனது மனைவி தன்னுடன் எப்போதும் இருக்கும் உணர்வை ஏற்படுத்திக் கொள்ள தான் இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்தார்.
மேளா பொன்னாகரத்தைச் சேர்ந்த சி சேதுராமனின் (C Sethuraman) மனைவி, 67 வயதான எஸ் பிச்சைமாணி (S Pichaimani), ஆகஸ்ட் 10 ம் தேதி மாரடைப்பால் காலமானார். அப்போதிருந்து, சேதுராமன் தனது மனைவி இல்லாமல் வாழ மிகவும் தவித்தார். அவர் நினைவில் வாடினார். மனைவியின் வெற்றிடத்தை நிரப்ப மிகவும் சிரமப்பட்டார்.
அவரது மறைவுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, தற்போது அவர் தன் மனைவி நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு தத்ரூபமான சிலையை (Statue) அனைவருக்கும் முன் வெளிக்காட்டினார். இதில் அவரது மனைவி பச்சை நிற சேலை அணிந்துள்ளார். இந்த சிலையை உருவாக்க 25 நாட்கள் ஆனது.
ANI உடன் பேசிய அவர், "நான் சமீபத்தில் என் மனைவியை இழந்தேன். ஆனால் இந்த சிலையை நான் பார்க்கும்போது அவருடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஃபைபர், ரப்பர் மற்றும் சிறப்பு வண்ணங்களை உபயோகித்து இந்த சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.
இந்த சிலை, விழுப்புரத்தைச் சேர்ந்த சிற்பி பிரசன்னா என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு மாதத்திற்குள் சிலையை உருவாக்கி வழங்க ஒப்புக்கொண்டார். இதற்கு இன்னும் உயிரூட்டம் அளிக்க, உள்ளூர் ஓவியர் இதில் இறுதிகட்ட மேம்பாடுகளைச் செய்தார்.
மதுரையில் (Madurai) மூன்று பெரிய திருமண மண்டபங்களை வைத்திருக்கும் சேதுராமன், தனது 48 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் ஒரு நாள் கூட தனது மனைவியை விட்டு விலகி இருந்ததில்லை.
"ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக நான் சுகாதார ஆய்வாளராக இருந்த எனது அரசாங்க வேலையை விட்டுவிட்டேன். பல ஆண்டுகளாக, நான் பல முறை நிதி இழப்புகளை சந்தித்தேன். ஆனால் என் மனைவி எனக்கு எப்போதும் துணையாக இருந்தார். அவர் எனக்கு ஒரு சிறந்த தோழியாக இருந்தார்." என்று சேதுராமன் கூறினார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் தனது மறைந்த மனைவியின் ஒரு உருவச் சிலையை செய்து ஒரு வீட்டு விழா விழாவில் நிறுவியது சேதுராமனுக்கு உத்வேகத்தை தந்தது.
ALSO READ: காவியக் காதல்: உண்மை காதலுக்கு மரணமில்லை என்பதை நிரூபித்த கர்நாடகா வர்த்தகர்..!!!
திருமணம் ஆகி சில நாட்களிலேயே விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் இந்த காலகட்டத்தில், கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் இப்படி ஒரு நல்ல அன்பையும் புரிதலையும் கொண்டிருப்பது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வெண்டும்.