சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என மத்திய மாநில அரசுகளை எச்சரித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1919 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நடந்த கொடூரப் படுகொலை போல், 2018 மே 22 ஆம் நாள் தூத்துக்குடியில் நடந்த படுகொலைகள், தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக் ஆகியிருக்கிறது.


ஆம்; ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முறையிட சென்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதி வழியில் நடந்த பேரணியின் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தி 13 அப்பாவி மக்களின் உயிரை பறித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு.


கூட்டத்தைக் கலைப்பதற்காகத் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு அல்ல; அது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. எனவேதான், தலையிலும் வாயிலும் கழுத்திலும் குறிபார்த்துச் சுட்டனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் காவல்துறையால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, பயிற்சி பெற்ற, குறிபார்த்து சுடுகின்ற காவலர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.


ஸ்னோலின் வெனிஸ்டா, ஜான்சிராணி, தமிழரசன், ஜெயராமன், கந்தையா, காளியப்பன், அந்தோணி செல்வராஜ், மணிராஜ், செல்வ சேகர், கிளாஸ்டன், ரஞ்சித் குமார், கார்த்திக், சண்முகம் ஆகிய 13 பேர் துடிதுடித்து உயிர் இழந்தனர். 


துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதுவரையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, துப்பாக்கிச் சூட்டில் உயிர் பலியானவர்களின் குடும்பங்களைக் காவல்துறை தொடர்ந்து மிரட்டி அச்சுறுத்தி வருகின்றது.


மக்களின் எழுச்சியைத் திசை திருப்ப, ஸ்டெர்லைட் ஆதரவு கூலிப்படையினர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கி, வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தினர்; இது திட்டமிட்ட முன்னேற்பாடு என்பது, அங்கிருந்த சிசிடிவி பட காட்சிகள் மூலம் அம்பலமாகி விட்டது. இந்த உண்மைகளை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டு, தமிழக அரசையும் காவல் துறையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய சுற்றுச்சூழல் போராளி முகிலன் காணாமல் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவரைக் கண்டுபிடிக்கக் காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.


கடந்த ஓராண்டாக தூத்துக்குடியில், அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற அடக்குமுறையைத் தமிழக அரசு கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றது. ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் யாரும் அங்கே போகக் கூடாது; துண்டு அறிக்கைகள் வெளியிடக்கூடாது; சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது என்று அடுக்கடுக்காகக் காவல்துறை மிரட்டி வருகின்றது.


கடந்த ஆண்டு மே 22 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்குக் கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. நீதிமன்றத்திற்குச் சென்றால், ‘அரங்குக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்துங்கள்’ என அறிவுறுத்தப்படுகின்றது.


இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படையான பேச்சு உரிமை கருத்த உரிமையை மறுத்து, மக்கள் மீது ஒடுக்குமுறையை ஏவி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும். தூத்துக்குடியில் நடந்த படுகொலைகளுக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும்.


ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த 22 ஆண்டுகளாக இடையறாது மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து போராடி வருவதை தமிழக மக்கள் அறிவார்கள். மக்கள் நலனுக்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, எடப்பாடி பழனிசாமி அரசு எல்லா வகையிலும் துணை நிற்பதை மறைக்க முடியாது.


தூத்துக்குடி மக்களை ஏமாற்றி வரும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தையும் முறியடிக்க, மே 22 தியாகிகளின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நாளில் உறுதி ஏற்போம்.


ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூடுகின்ற வரையில் மக்கள் போராட்டம் ஓயாது என்பதை, மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்து கொள்கின்றேன்.


இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.