இந்தித் திணிப்பு, திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுதல் தமிழக மக்களைக் கொதித்து எழச் செய்யும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக பொதுமறையான திருக்குறளைத் தந்த ‘செந்நாப் போதார்’ திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பாஜக ட்விட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது என குறிப்பிட்டுள்ளார். 


இந்தி திணிப்பும் திருவள்ளுவருக்கு மதச்சாயம் பூசப்படும் விவகாரமும் தமிழக மக்களை கொதித்து எழச் செய்யும் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றிக்கொண்டு இருக்கும்போது, இன்னொரு பக்கத்தில் தமிழ் மொழியை அழிக்கும் செயலில் பாஜக ஈடுபட்டிருப்பது பாஜகவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். 


மத்திய பாஜக அரசின் இந்தித் திணிப்புக்கு அதிமுக அரசு துணையாக இருப்பதாகவும், இது தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் என வைகோ எச்சரித்துள்ளார். திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின்  பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜக நிறுத்தாவிடில், தமிழக மக்கள் மென்மேலும் கோபாவேசமாய் கொதித்து எழுந்து தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் வைகோ தனது அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.