மேகதாது விவகாரம்: அனைத்துக்கட்சிக் குழுவின் டெல்லி பயணம் வெற்றியா? தோல்வியா?
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழு மேகதாது விவகாரம் முழுவதையும், இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும் அமைச்சருக்கு விளக்கியுள்ளது.
மேகதாது அணை பிரச்சனை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு இடையில் தீவிர பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. கர்நாடகா அரசு கட்டும் இந்த அணையை தடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பேரில் தமிழகத்தின் அனைத்துக் கட்சிக் குழு ஒன்று டெல்லி சென்றது.
டெல்லி சென்ற அனைத்துக்கட்சிக் குழுவில் திமுக-வின் சார்பில் துரைமுருகன் (Durai Murugan), ஆர்.எஸ்.பாரதி, அதிமுக-வின் சார்பில் டி.ஜெயக்குமார், காங்கிரசின் கோபண்ணா, பாமக-வின் ஜி.கே.மணி, மதிமுக-வின் வைகோ, விசிக-வின் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் என்.பெரியசாமி, மமக-வின் ஜவாஹிருல்லா, பாஜக-வின் பால் கனகராஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளனர்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த இந்த குழு தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும் இந்த முழு விவகாரத்தையும் அமைச்சருக்கு விளக்கியுள்ளது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆணைய ஒப்புதல் இன்றி மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்தார். மேகதாது அணைக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற அளவில் மத்திய அரசு உறுதி அளித்திருப்பதகாவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையில் பெரும் சிக்கலுக்கான காரணமாக இருக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடா அரசு மேகதாது (Mekedatu) என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தடுக்க சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்னர், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) பிரதமரை சந்தித்து மேகதாது அணைப் பிரச்சினை பற்றி விளக்கி, தமிழகத்தின் நிலைப்பாட்டையும் எடுத்துக்கூறினார்.
ALSO READ:தமிழகத்தை வஞ்சிக்கும் கர்நாடகா: தென்பெண்ணை ஆற்றிலும் தமிழ்நாட்டின் உரிமை பறிப்பு!
மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் அளித்த தமிழக முதல்வர் இதற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது என்றார்.
முன்னதாக, கர்நாடகாவின் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக கலந்தாலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளை சொல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதியையும் வழங்கக் கூடாது என மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள வெண்டும்.
2. மேகதாது அணை விவகரத்தில், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
3. இது தொடர்பான தீர்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஒப்புதல் அளித்து, இதற்கான நடவடிக்கைகள் எடுக்க மத்திய அரசை கோர வேண்டும். தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து கட்சி தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் நேரில் சென்று வழங்க வேண்டும்.
இந்த தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தின் அனைத்துக்கட்சிக் குழு டெல்லிக்கு பயணித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.
ALSO READ: மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சருக்கு சட்டப்படி பதிலடி தந்த அமைச்சர் துரைமுருகன்
ALSO READ: தமிழகத்திற்கு 33 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR