அமைச்சர் சேகர் பாபுவின் உருவ பொம்மையை அடித்து, எரித்த பாஜக!
பெரம்பலூரில் அமைச்சர் சேகர் பாபுவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து, எரித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சனாதான விவகாரம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சேகர் பாபு, திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.இராசா விற்கும் எதிராக பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சனாதான விவகாரம் தொடர்பாத அவதூறாக பேசியதாக கூறி அறநிலையத்துறையிலேயே அமைச்சராக இருக்கும் அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக கோரி பெரம்பலூரில் உள்ள அறநிலையத்துறையின் அலுவலகத்தை 10 க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் போராட்டம் குறித்து முன் கூட்டியே தகவலறிந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!
இந்நிலையில் பா.ஜ.க மாவட்ட தலைவர் செல்வராஜ், தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் முத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் அமைச்சர் சேகர் பாபுவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்தும், எரித்தும் போட்டோவை கிழித்தும் திமுக ஒழிக, அமைச்சர் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும் என்றும் ஆண்டி முத்து ராசா ஒழிக என்றும் முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க வினரை கைது செய்தனர். இந்த திடீர் போராட்டத்தால் பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மேலும், திருப்பத்தூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் அருகில் இந்து அறநிலைய துறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கார்த்திகாயினி கலந்துக் கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து அறநிலையதுறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும், சனாதனத்தை பற்றி பேசி வரும் உதயநிதிக்கு நாவடக்கம் தேவை, இதுபோன்று தொடர்ந்து பேசி வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி தொண்டர்களை முதல்வர் கண்டிக்க வேண்டும், தமிழகத்தின் சடங்குகளை சனாதனம் என்பதா, அல்லது கலாச்சார த்தை இழிவுபடுத்தி வரும் திமுக அமைச்சர்களை கண்டிக்கிறோம், சனாதனத்தை பற்றி பேசும் முதல்வர் வீட்டில் பூசைகள் செய்வதை நிறுத்தவேண்டும், அவரின் மனைவி கோயிலுக்கு போவதை நிறுத்தி விட்டு சனாதனத்தை பற்றி நீங்கள் பேசுங்கள், இதேபோன்று தொடர்ந்து பேசினால் தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த முற்றுகை போராட்டத்தின் போது போலீசாருக்கும் ஆர்ப்பாட்டம் செய்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அனைவரும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ