சென்னையில் சமூக பரவல் வந்துள்ளதா, இல்லையா என ஆய்வு செய்ய வேண்டும்: MKS
சென்னையில் சமூக பரவல் வந்துவிட்டதா..? இல்லையா...? என்பது பற்றி ஆய்வு செய்து, அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!
சென்னையில் சமூக பரவல் வந்துவிட்டதா..? இல்லையா...? என்பது பற்றி ஆய்வு செய்து, அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!
சென்னையில் சமூக பரவல் வந்துவிட்டதா? இல்லையா? என்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் அறிவியல் ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் சென்னை மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர்கள், படுக்கைகளில் எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... சென்னை மாநகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் வாரியாக படுக்கைகள் வெண்டிலேட்டர்கள் எண்ணிக்கையையும், கொரோனா நோயால் இறந்தோரின் எண்ணிக்கையையும் இனிமேல் மாநிலக் கட்டுப்பாட்டு அறை வெளியிட வேண்டும். மாநகரில் ‘சமூகப் பரவல்' வந்து விட்டதா இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ‘விபரீதமான' நிர்வாகத் திறமையின்மை, வெளிச்சம் போட்டு நிற்கிறது. இறப்பு எண்ணிக்கையைக் கூட இதயமற்ற முறையில் இருட்டடிப்பு செய்யும் அ.தி.மு.க. அரசின் செயல், ‘கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை' என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளைத்தான் எனக்கு நினைவு படுத்துகிறது.
"அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு, ஐந்து தினங்கள் அங்கே இருந்து, இறந்தால் மட்டுமே கொரோனா மரணக் கணக்காகக் காட்டப்படுகிறது" என்பது எவ்வளவு அபத்தம் - அபாயகரமான அணுகுமுறை? தலைநகர் சென்னையில் ‘கொரோனா' கோரத் தாண்டவமாடும் நேரத்தில் கூட, வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற மனசாட்சி இந்த அரசுக்கு எள்ளளவும் இல்லை.
READ | கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் முழு ஒத்துழைப்பு தேவை: EPS
தனியார் மருத்துவமனைகளில் இறப்போர் எண்ணிக்கை பற்றியும் எந்த தகவலையும் வெளியிடுவதில்லை. ‘கட்டுக்கடங்காமல் போகும் கொரோனா நோய்த் தொற்று' ‘கணக்கில் வராத மரணங்கள்' என்ற ஆபத்தில் சென்னை மாநகர மக்கள் அனுதினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மாநகரத்தில் மட்டும், 20 ஆயிரத்தைத் தாண்டிவிட்ட கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல், அ.தி.மு.க. அரசின் நிர்வாகமே தற்போது "வெண்டிலேட்டரில்" இருக்கிறது!
சென்னை மாநகர கொரோனா நோய்த் தொற்றைக் கையாளுவதில் எத்தனை குழப்பங்கள்? ‘கோயம்பேடு மார்கெட்' வேண்டுமா - வேண்டாமா என்பதை முடிவு செய்ய அ.தி.மு.க. அரசுக்கு ஒரு மாதம்! ‘சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கிறதா - இல்லையா' என்பதை அறிவிக்க இன்றுவரை தயக்கம், தடுமாற்றம்! மண்டலம் மண்டலமாக, கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்ட பிறகும், ஏன் இந்தத் தயக்கம்?
READ | மாஸ்க் இல்லை என்றால் வாடிக்கையாளரை கடைக்குள் அனுமதிக்க கூடாது: TN Govt
"கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதில்", முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான ஆட்சி படுதோல்வியடைந்து விட்டது என்பதைப் பாமரரும் அறிவர். அதனால் இன்றைக்குச் சென்னை மாநகர மக்கள் நோய்த் தொற்று அச்சத்தில் ஆடிப் போயிருக்கிறார்கள். அது போதாது என்று மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையை, சரி பாதியாகக் குறைத்து வெளியிட்டு - மிகப்பெரிய துரோகத்தை - மன்னிக்க முடியாத குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.