மருத்துவம் படித்திருந்தாலும் தமிழிசை எல்.கே.ஜிதான் - மீண்டும் முரசொலி விமர்சனம்
மருத்துவம் படித்திருந்தாலும் அரசியல் அறிவில் தமிழிசை சௌந்தரராஜன் எல்.கே.ஜிதான் என முரசொலி நாளேடு விமர்சனம் செய்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என திமுகவும், கூட்டணி கட்சிகளும் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க திட்டமிட்டிருக்கின்றன. இதற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார். இதனையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் மற்ற மாநில ஆளுநராக இருந்துகொண்டு தமிழக விவகாரம் குறித்து கருத்து கூறுவதை விமர்சிக்கும்விதமாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை வெளியானது.
அந்தக் கட்டுரையில், ஆளுநர்களே; எரிமலையோடு விளையாடாதீர்கள்!’ என்ற தலைப்பில் , “தமிழ்நாட்டு ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையேயுள்ள பிரச்னையில் தமிழிசை, அவரது கூற்றுப்படி மூக்கை, உடம்பை, வாலை நீட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்திருந்த தமிழிசை திமுகவையும், முரசொலியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் தமிழிசையின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முரசொலி நாளேட்டில், கேள்வி - பதில் பகுதி ஒன்று வெளிவந்திருக்கிறது. அது பின்வருமாறு:
கேள்வி: சிலந்திக்கு (முரசொலி) ஆளுநர் தமிழிசை காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறாரே, பார்த்தீர்களா?
பதில்: மொஹரம் பண்டிகையின்போது இஸ்லாமிய சகோதரர்களில் ஒரு பிரிவினர் தங்களைத் தாங்களே சவுக்கால் அடித்துக் கொள்வார்கள்: பார்த்திருப்பீர்களே! அம்மையார் கூறியிருப்பது, ஒரு மாலை நாளேடு குறிப்பிட்டபடி, தனக்குத்தானே அடித்துக் கொண்ட சவுக்கடி போலத் தோன்றுகிறது! கால்பந்தாட்டத்தில் எதிரியை எதிர்கொள்ள முடியாத நேரத்தில் தோல்வி பயத்தில் பந்தை விட்டு விட்டு ஆளை அடிப்பார்களே; அந்தப் போக்குதான் அவர் பதிலில் தெரிகிறது!
கேள்வி: எரிமலைகளால் இமயமலையை ஒன்றும் செய்ய முடியாது என்கிறாரே தமிழிசை!
பதில்: தன்னைப் பற்றி அதீதமான கற்பனையில் மிதக்கிறார் அவர்! எதிர்ப்பைக் கண்டதும் ஓட்டுக்குள் பதுங்கிடும் நத்தை, அந்த ஓடு இமயமலை போன்றது என எண்ணிக் கொள்ளும்; அம்மையார் பதில், அந்த ரகத்தைச் சார்ந்ததுதான்! விடுங்கள். மடுக்கள் தங்களை மலையாகக் கருதலாம்; மக்களுக்குத் தெரியாதா மடு எது. மலை எது என்பது!
கேள்வி: சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருக்கிறார்கள் என ஆவேசப்பட்டுள்ளாரே, ஆளுநர் தமிழிசை!
பதில்: ஒன்றிய அமைச்சர் பதவியில் சீரியலில் நடித்துவிட்டு அமர்ந்திருக்கும் ஸ்மிருதி இராணி மீது ஏதாவது கோபமா அல்லது எம்.ஜி.ஆர்..ஜெயலலிதா போன்றவர்கள் மீது எரிச்சலா? என்று தெரியவில்லை! அறிக்கைகள் எழுதும்போது எத்தகைய எதிர் வினைகள் வரும் என்பதை சிந்தித்து எழுதவேண்டும் என்ற பக்குவம் கூட இல்லாது ஒரு ஆளுநர் தத்து பித்து என இப்படி எழுதுவதால்தான்; பலருக்கு அம்மையாரை எண்ணும்போது "குருவித்தலை பனங்காய்" பழமொழி நினைவுக்கு வருகிறது. அதனை மேலும் மேலும் ஊர்ஜிதம் செய்து வருகிறார்!
கேள்வி: தெலுங்கானாவில் பண்ணை வீட்டில் நடக்கும் வாரிசு அரசியல் ஆட்சியை மக்கள் முன் தோலுரித்துக் காட்டியதால் ஆளுநர் மாளிகை மீது கோபம் என்கிறாரே; அந்த மாநில ஆளுநர்?
பதில்: ஆளுநர் பதவிக்கு, தான் எத்தனைப் பக்குவமற்றவர் என்பதை அவரே வெளிப்படுத்தியுள்ளதை இது காட்டவில்லையா? அவர் குறிப்பிட்டுள்ள 'வாரிசு அரசியல்' அந்தக் கட்சியின் சொந்த விவகாரம். அந்தக் கட்சியினர் அதுகுறித்து முடிவெடுத்துக் கொள்வர்! ஒரு ஆளுநர் பணி என்பது ஆளும் கட்சியின் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது அல்ல என்ற அடிப்படைகூடத் தெரியாமல் சம்பந்தமில்லா விவகாரங்களில் மூக்கையும். வாலையும் நுழைப்பதால்தான் வீண் வம்புகளை விலைக்கு வாங்கிக் கொண்டு. அதற்கு எதிர்வினை ஏற்பட்டதும் அலறுகிறார்!
கேள்வி: இலவச பனங்காய்களை தலையில் சூட்டிக் கொள்ளும் வாரிசுக் குருவிகள் அல்ல நாங்கள் என்று தனது அறிக்கையில் சவடால் விட்டுள்ளாரே; ஆளுநர்!
பதில்: அதற்கு குமரிஅனந்தன் அவர்கள்தான் பதில் கூற வேண்டும்!
கேள்வி: வதந்திகளைப்பரப்பும் சிலந்திகள் நசுக்கப்படலாம் என்று மிரட்டியுள்ளாரே, தமிழிசை!
பதில்: தெலுங்கானாவில் காட்ட வேண்டிய பூச்சாண்டியை. அங்கு காட்ட முடியாததால் "சிலந்தியிடம் காட்டிப் பார்க்கிறார்; இந்தப் பூச்சாண்டி அல்ல: இதற்கு மேல் படுபயங்கர பூச்சாண்டிகளை எல்லாம் கண்டவர்கள் நாங்கள்! இங்கே மிரட்டல் பருப்புகள் வேகாது!
கேள்வி: இடி ஒலியே எங்களை ஒண்ணும் செய்ய முடியாதபோது, முரசொலி எங்களை என்ன செய்து விட முடியும்? என்று கேட்டிருக்கிறாரே; தமிழிசை!
பதில்: முரசொலி கேட்டு எழும் படைகள் போர்க்களத்தில் எதிரிப்படையின் இடுப்பொடிக்கும் என்பது தெரியாதா அம்மையாருக்கு!
கேள்வி: தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி நான் கருத்துக் கூறினால், அதை எதிர்த்து கட்டுரை எழுதுவதுதான் உங்கள் கருத்துச் சுதந்திரமா? என்று கேட்டிருக்கும் ஆளுநர் தமிழிசைக்கு சிலந்தியின் பதில் என்ன?
பதில் : மருத்துவப் படிப்பு படித்திருந்தாலும், அரசியல் அறிவில் இன்னும் எல்.கே.ஜி. யாகவே இருக்கிறார் என்பதற்கு இதைவிட சான்று வேண்டுமா! அரசியல்வாதியாக அண்டை மாநில அரசியல் பற்றிப் பேசலாம்; ஆளுநராக அரசியல் பேசக் கூடாது என்ற அடிப்படை அரசியல் அறிவுகூட இல்லாதவர்களுக்கு என்ன பதில் கூறிட முடியும்” என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு - திருமாவளவன்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ