நெய்வேலி: உளவுத்துறை எச்சரித்தும் வெடித்த கலவரத்தில் கல்வீச்சு - 8 போலீசாருக்கு மண்டை உடைந்தது
நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த கலவரத்தில் 8 காவல்துறையினர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டத்தில் கலவரம் வெடித்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்எல்சி நிறுவனம் கடந்த சில வாரங்களாக விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. கால்வாய் அமைக்க திட்டமிட்ட அந்நிறுவனம் விளைநிலங்களுக்கு நடுவே ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்தது. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இருப்பினும் என்எல்சி நிறுவனம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இது குறித்து மக்களுக்கு ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய தொகையும் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கபட்டது. ஆனால் இதனை மக்கள் ஏற்க மறுத்தனர்.
மேலும் படிக்க | நெய்வேலியில் உச்சக்கட்ட பதற்றம்: அன்புமணி ராமதாஸ் கைது - வெடித்தது கலவரம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், உடனடியாக என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இன்று நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முன்பு நேரடியாக போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது, தொண்டர்கள் மத்தியில் என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகளை அனுமதிக்க மாட்டோம், எவ்வளவு விலை கொடுத்தாலும் விளை நிலங்களையும் தரமாட்டோம் என கூறினார். விரிவாக்கப் பணிகளை என்எல்சி நிறுவனம் உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்திய அன்புமணி ராமதாஸ், திடீரென என்எல்சி நுழைவு வாயிலை நோக்கி முற்றுகையிட சென்றார்.
உளவுத்துறை சார்பில் ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் இந்த போராட்டத்தில் நுழைவு வாயில் முற்றுகையிடப்பட்டு, நிறுவனத்திற்குள் நுழைய முயற்சி எடுப்பார்கள், அதனால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்ததால் 10 மாவட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். தடுப்புகள் அமைத்து தயார் நிலையில் இருந்தபோதும், பாமகவைச் சேர்ந்த சிலர் திடீரென காவல்துறையினரின் தடுப்புகளையும் மீறி என்எல்சி நிறுவனத்துக்குள் செல்ல முயன்றனர். இதனால் காவல்துறையினர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றபோது, அங்கிருந்தவர்களில் சிலர் கற்களைக் கொண்டும், கம்புகளைக் கொண்டும் காவல்துறையினரை தாக்க தொடங்கினர்.
இதனால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால், அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. கம்புகளும் கற்களும் கொண்டு தாக்கப்பட்டத்தில் காவல்துறையினர் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 8 பேருக்கு மண்டை உடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கலவரம் வெடித்ததைத் தொடர்ந்து அங்கு தென்மண்டல ஐஜி உடனடியாக வருகை தந்து கலவரப் பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்தார். தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலும் அப்பகுதிக்கு செல்கிறார்.
கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கும் காவல்துறை, அவர்களை முழுமையாக அடையாளம் காண அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது. பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரத்தை தொடர்ந்து நெய்வேலி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. தருமபுரி உள்ளிட்ட சில இடங்களில் அன்புமணி ராமதாஸின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் போராட்டத்திலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
மேலும் படிக்க | மின்கம்பம் விழுந்து விபத்து... துண்டான விளையாட்டு வீரரின் கால் - கதறும் தாய்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ