ஒற்றை தலைமை... அஸ்திரத்தை கையிலெடுத்த ஓபிஎஸ் - அதிமுகவுக்குள் அடுத்த பூகம்பம்?
தொண்டர்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறை வாசத்துக்கு பிறகு அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சசிகலா தற்போது மீண்டும் அரசியல் பாதைக்கு திரும்பியுள்ளார். இதற்கிடையே சசிகலா சிறைக்கு சென்றதும் கைகோர்த்த இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை வகித்துவருகின்றனர். இந்தச் சூழலில் சசிகலாவின் நிழலைக்கூட கட்சிக்குள் விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டிவருகிறார்.
ஆனால், கட்சியில் தனக்கான முக்கியத்துவம் சிறிது சிறிதாக குறைந்துவருவதை உணர்ந்துகொண்ட ஓபிஎஸ் சசிகலாவின் பக்கம் சாய்வது போல் சில காட்சிகள் அரங்கேறின. இப்படிப்பட்ட நேரத்தில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சு சில காலமாகவே அதிமுகவில் எழ ஆரம்பித்தது.
இந்தப் பேச்சு நேற்று நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் சத்தமாகவே ஒலித்தது. கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென பலர் வலியுறுத்த பொதுச்செயலாளர் பதவியை அடைவதற்கு இபிஎஸ் தூபம் போட்டார். இதற்கு இபிஎஸ் ஆதரவாளர்களான தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவிக்க; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வரும் 23ஆம் தேதி வானகரத்தில் நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பிடித்துவிட்டால் இனி தனக்கு அரசியலில் எதிர்காலமே இருக்காது என ஓபிஎஸ் கருதுவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் கொடுக்கவில்லை. இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவியையும் பறித்துக்கொண்டு ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட முயலும் எடப்பாடியை எப்படி ஏற்றுக்கொள்வது என கேள்வி எழுப்புகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
மேலும் படிக்க | அதிர்ச்சி செய்தி: இரண்டு வேக்சின் போட்டும் 18 வயது சிறுமி கொரோனாவிற்கு பலி!
நிலைமை இப்படி இருக்க ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக்கு கிளம்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்கள் எதிர்பார்ப்பது பொதுக்குழுவில் நடக்கும் என கூறியிருப்பதால் பொதுச்செயலாளர் பதவிக்கு யுத்தம் மேற்கொள்வது என ஓபிஎஸ் முடிவு எடுத்துவிட்டார் என்றே பார்க்கப்படுகிறது.
முன்னதாக பொதுக்குழு தீர்மானத்தை வடிவமைப்பதற்காக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நடத்தியஆலோசனைக் கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்துகொள்ளாததும், ஓபிஎஸ் தலைமை அலுவலகத்துக்கு வருகிறார் என்று தகவல் தெரிந்ததும் இபிஎஸ் ஆதரவாளர்களாக கருதப்படும் ஜெயக்குமார், சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் அங்கிருந்து கிளம்பியதும்; அவர்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வசை பாடியதும் என அதிமுகவுக்குள் அடுத்த பூகம்பத்தின் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இது ஒருபுறமிருக்க இபிஎஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் தன்னை கடுமையாக நெருக்கும்பட்சத்தில் நேராக சசிகலாவை சென்று சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு எழுந்திருக்கிறது. எது எப்படியோ 23ஆம் தேதி நடக்கவிருக்கும் பொதுக்குழு அதிமுகவுக்குள் அடுத்த பூகம்பத்தை கிளப்பும் என்றே கணிக்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR