பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைங்க : EPSக்கு OPS கடிதம்
வரும் 23ம் தேதி பொதுக்குழு நடக்க இருந்த நிலையில் பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
அதிமுக அலுவலகத்தில் கடந்த ஒரு வார காலமாக அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. ஒற்றை தலைமை பிரச்சனை, பொதுக்குழு பிரச்சனை என தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையே பெரும் சலசலப்பு நிலவி வருகிறது. வரும் ஜூன் 23ம் தேதி அன்று கழக பொதுக்குழு நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில், "23.06.2022 அன்று நடைபெற உள்ள கழகப் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் 14.06.2022 அன்று மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மேலும் படிக்க | ஒபிஎஸ்ஸூக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட கண்டிஷன் - பரபரக்கும் ஆலோசனைகள்
பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள். கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றை தலைமை, இரட்டைத் தலைமை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. பொதுவாக கழக அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவுக்கு அழைப்பது நமது கழகத்தால் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறை 23.06.2022 அன்று நடைபெற்ற பொதுக்குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் எங்களை தொலைபேசி வாயிலாகவும் நேரில் சந்தித்து சிறப்பு அழைப்பாளர்களாக எங்களை அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அதே மண்டபத்தில் பலமுறை கழகத்தின் பொதுக்குழு நடத்தியபோது சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். இப்போது அதே மண்டபத்தில் இடம் இல்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று தனது ஆதங்கத்தை தெரியப்படுத்துகின்றனர். இதுமட்டுமில்லாமல் முன்னறிவிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டை தலைமை வைத்து 14.06.2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில கழகச் செயலாளரும், கழக நிர்வாகிகள் கழக சட்டவிதிகளை அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். அத்தகைய கருத்தால் கழகத் தொண்டர்கள் கொதித்து போய் உள்ளனர். கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது, இதனை அடுத்து கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். பொதுக்குழு கூட்டம் தொடர்பான பொருள் அடங்கிய விபரம் கிடைக்கப்பெறவில்லை என கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் பல மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியம் ஆகிறது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். எனவே மேற்காணும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கழகத்தில் நலன் கருதி 23 அன்று நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்களான நாம் இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அதிமுக ஒற்றைத் தலைமைக்கு பிள்ளையார் சுழிபோட்ட அமைச்சர் ஜெயக்குமார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR