Sterlite Plant Issue: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கமல்ஹாசன் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.,
பேரழிவை உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலை (Sterlite Plant) திட்டங்களும், தொழிற்சாலைகளும் ஏன் வளரும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன என ஒரு செனட் சபை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு, மூன்றாம் உலக நாடுகளில்தான் உயிர்களின் விலை மலிவானது என்று பதில் வந்தது. ஐரோப்பாவில் இயற்கை வளங்களைச் சீரழிக்கும் ஒரு திட்டம் வரும் என்றால் அதற்கு மிகப்பெரிய விலையை அபராதமாகக் கொடுக்க நேரிடும்.
ALSO READ | TN Assembly: 'தி.மு.க ஒரு அடக்க முடியாத யானை'- சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்!!
எனவே இந்த சூழலைப் பாதிக்கும் எந்த உற்பத்தியையும் மூன்றாம் உலக நாடுகளில்தான் ஊக்குவிப்பார்கள். இந்த மனோபாவத்திற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதன் அடையாளங்களுள் ஒன்று தான் ஸ்டெர்லைட். பின்தங்கிய பகுதிகளில் பேராபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளை அனுமதித்து செய்லபடுத்தி விடுகிறார்கள். பொருளாதார வளர்ச்சிக்கு உற்பத்தி தேவைதான், வியாபாரம் தேவைதான். ஆனால், அது மக்களின் வாழ்வை அழித்துத்தான் நிகழவேண்டும் என்றால் அது பிள்ளைக்கறி கேட்பதற்கு ஒப்பானது என தெரிவித்துள்ளார்.
இந்த ஆலை இங்கே அமைய வேண்டும் என்று மக்கள் கேட்கவில்லை. வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு என அவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டார்கள். ஆலையால் ஏற்பட்ட பொருளாதார அனுகூலங்களை விட ஆலை வெளிப்படுத்திய மாசுகளும் கழிவுகளும் இயற்கைக்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஏற்படுத்திய பாதிப்புகள் மிக மிக அதிகமாக இருந்தன. எதை விலையாகக் கொடுத்து எதைப் பெற்றிருக்கிறோம் என்பதை மக்களே உணர்ந்து ஒன்று திரண்டு போராடும்போது அந்தக் குரல் இரும்புக்கரம் கொண்டு ஓடுக்கப்பட்டது. இன்றும் அந்த இரும்புக்கரம் ஓய்ந்துவிடவில்லை. எப்படியாவது ஆலையைத் திறந்து மீண்டும் உற்பத்தியைத் துவங்கிவிட முடியாதா என அது சகல வழிகளிலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறது.
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையால் சந்தித்த, சந்திக்கும், சந்திக்கப் போகும் துயரங்கள் அனைவரும் அறிந்தவை. எதிர் வரும் சந்ததிகளையும் பாதிக்கும் அளவிற்கு தீவிளைவுகள் அங்கே நிகழ்ந்துவிட்டன. இந்த ஆலையிலிருந்து 82 முறை விஷவாயு கசிந்ததாக தமிழக அரசு குற்றம் சாட்டியதும், விதிமுறைகளை மீறி குழலைச் சீரழித்திருக்கிறது என உச்சநீதிமன்றமே கண்டித்து 100 கோடி ரூபாய் அபராதம் விதித்ததும் வரலாறு.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளில் உறுதியளித்தபடி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபெற்றுக்கொண்டிருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இந்த உயிர்க்கொல்லி ஆலையை நிரந்தரமாக அகற்றும் சிறப்புத் தீர்மானத்தை இயற்றவேண்டும். தீர்மானத்தின் நகல் உச்சநீதிமன்றத்தின் பார்வைக்கும் கொண்டு செல்லப்படவேண்டும். அத்துடன், விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு சொந்த ஆதாயங்களுக்காக ஸ்டெர்லைட் ஆலை சர்வ சுதந்திரமாகச் குழலைச் சீரமிக்க அனுமதித்த அரசு அதிகாரிகள் மீதும் நீள்துயிலில் இருந்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நிகழ்ந்த படுகொலைகளுக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கவும், இப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை இழந்தவர்களுக்குத் தூத்துக்குடியிலேயே நினைவகம் அமைத்திடவும் தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ALSO READ | ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR