மாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு; அன்புமணி வேண்டுகோள்...
மாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசு பணிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தலாம் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., மாநில அரசு பணிகளுக்கு தகுதியான பணியாளர்களை தேர்வு செய்ய தேசிய அளவில் பொதுத்தேர்வு நடத்தலாம் என்றும், இதற்காக உருவாக்கப்படும் அமைப்புடன் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்தத் திட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்பது மட்டுமின்றி, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயலும் ஆகும்.
மத்திய அரசின் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை இந்த யோசனையை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் தங்களின் கருத்துகளை அடுத்த 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி மாநில அரசின் பல்வேறு துறைகள், வங்கிகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் தொழில்நுட்பம் சாராத பி மற்றும் சி நிலை பணிகளுக்கு தேசிய அளவில் பொது போட்டித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் பங்கேற்போர் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேசிய அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். இந்த பட்டியல் 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். மாநில அரசு மற்றும் பொதுத்துறை பணிகளில் சேர விண்ணப்பம் செய்பவர்களை, அவர்களின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு முறை தேர்வு எழுதியவருக்கு அடுத்த 3 ஆண்டுகளில் எந்த வேலையும் கிடைக்காவிட்டால், அவர் மீண்டும் தேர்வு எழுத வேண்டும். தரவரிசையை உயர்த்திக் கொள்ள விரும்புபவர்கள் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் ஒரு தேர்வை எழுதலாம். அதேநேரத்தில் ஒருவர் அவரது வாழ்நாளில் 3 முறைக்கு மேல் இத்தேர்வை எழுத முடியாது.
மத்திய அரசின் இந்த யோசனை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். மாநில அரசுகள் அவற்றின் ஊழியர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள அவற்றுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் அதிகாரம் வழங்கியுள்ளது. அதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 14&ஆவது பகுதியில் 308 முதல் 323 வரை 16 பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பணியாளர்கள் நியமனம், மத்திய, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசே வைத்துக் கொள்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.
அதுமட்டுமின்றி, ஒரு காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் அனைத்து பணியாளர்களையும் தேர்ந்தெடுக்க ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மட்டுமே இருந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறி, பணிகளின் தன்மைக்கு ஏற்ப ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், பொறியாளர்கள் தேர்வு வாரியம், மின்துறை பணியாளர்கள் தேர்வு வாரியம் என ஏராளமான அமைப்புகள் உருவாக்கப் பட்டுள்ள நிலையில், அவை அனைத்தையும் கலைத்து விட்டு பலவிதமான பணிகளுக்கு ஒரே அமைப்பை ஏற்படுத்துவது மிகவும் பிற்போக்கானது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்ற முழக்கம் அதிகரித்து வரும் நிலையில், இது மாநிலங்களை அலங்கரிக்கப்பட்ட உள்ளாட்சிகளாக தரம் இறக்கிவிடும்.
மத்திய அரசின் இந்த யோசனை சமூக நீதிக்கும் எதிரானதாகும். மத்திய அரசு முன்வைத்துள்ள இந்தத் தேர்வு கிட்டத்தட்ட நீட் தேர்வு போன்று தான் நடத்தப்படும். மருத்துவ மாணவர் சேர்க்கையைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தான் அந்தந்த மாநில மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். ஆனால், தமிழகம் போன்ற மாநிலங்களில் வேலைவாய்ப்புக்கு அத்தகைய கட்டுப்பாடு இல்லை என்பதால், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசு பணிகளில் சேர்ந்து விடுவார்கள். தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணிகளில் கிட்டத்தட்ட 70% பிற மாநிலத்தவர்களால் அபகரிக்கப் பட்டுவிட்ட நிலையில், மாநில அரசுப் பணிகளும் அபகரிக்கப்படவே இந்த திட்டம் வழி வகுக்கும்.
பொதுப்போட்டித் தேர்வை 3 முறை மட்டுமே எழுத முடியும் என்பது மற்றொரு அநீதி ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வையும் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுத முடியும். இ.ஆ.ப., இ.கா.ப., போன்ற குடிமைப்பணிகளுக்கான தேர்வுகளை பொதுப்பிரிவினர் 6 முறையும், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 9 முறையும், பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் வயது வரம்புக்குட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். அவ்வாறு இருக்கும் போது பொதுப்போட்டித் தேர்வை 3 முறை மட்டுமே எழுத வேண்டும் என்பது அரசுப் பணிகளில் சேரும் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயலாகும். இதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும்.
எனவே, மாநில அரசு பணிகள் மற்றும் பொதுத்துறை பணிகளுக்கு பொதுப்போட்டித் தேர்வு நடத்தும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சமூக நீதிக்கு எதிரான இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து திட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.