அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறை பயன்படுத்தபடுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!
அரசியல் பழிவாங்குதலுக்காக காவல் துறையை தவறாக பயன்படுத்துவதைக் கைவிடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்
அரசியல் பழிவாங்குதலுக்காக காவல் துறையை தவறாக பயன்படுத்துவதைக் கைவிடுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று விடுத்துள்ள அறிக்கையில், திமுக அரசு எப்படி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியாக தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடித்ததோ அதுபோல் அரசியல் ரீதியாக நேர்மையான முறையில் எதிர்க்கட்சிகளை எதிர்க்கத் திராணியின்றி அதிமுக ஆட்சியில் சுதந்திரமாக செயல்பட்ட காவல் துறையை, குறிப்பாக லஞ்ச ஒழிப்புத் துறையை தவறாகப் பயன்படுத்தி முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்ப் புகார் சுமத்தி அமைச்சர்களுடைய வீடுகள் மட்டுமல்லாமல், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என்று குறைந்தது, சுமார் 30 - 40 வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ALSO READ ’செமஸ்டரில் 90% பேர் தோல்வியா?’ போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
முந்தைய அதிமுக அரசு மீது தற்போதைய திமுக அரசு சுமத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கு சாதகமாக செயல்படாத, உடன்படாத, நேர்மையாக செயல்பட்ட அதிகாரிகளை உடனடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. உடன்படாத, பணியிட மாறுதல் செய்ய முடியாத நிலையில் உள்ள அதிகாரிகளை ராஜினாமா செய்ய வற்புறுத்தப்படுகின்றனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. வெங்கடாசலம் அவர்கள் அம்மாவின் அரசால் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரது பதவி செப்டம்பர் 2021 வரை இருந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், அவர் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது.
ஆனால் வெங்கடாசலம் அதிமுக அரசு மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஏற்ப நீங்கள் வாக்குமூலம் அளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என்று திமுக அரசால் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. இவர் ஒருவர் மட்டுமல்ல இதுபோல் பல அதிகாரிகள் மிரட்டப்பட்டு வருகின்றனர். உண்மைக்கு மாறாக முந்தைய அதிமுக அரசுக்கு எதிராக செயல்படமாட்டேன் என்று உறுதியாக நின்ற அவரை ராஜினாமா செய்யுங்கள் என்று திமுக அரசு கூறியபோது அவர் ராஜினாமா செய்யமாட்டேன் என்று தைரியமாக கூறியதாக செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில், அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்தி சுமார் 11 லட்சம் ரூபாய் மற்றும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறியது.
வெங்கடாசலம் சுமார் 35 ஆண்டு காலம் வனத்துறை அதிகாரி என்ற முறையில் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றிய மூத்த வனத்துறை அதிகாரி. அவர் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மாத சம்பளம் பெறுபவர். ஒரு திறமை மிக்க, அனுபவம் வாய்ந்த அனைத்திந்திய வனப் பணி மூத்த அதிகாரி இதுபோன்ற கோழைத்தனமான முடிவுக்கு வருவதற்கு ஒருபோதும் வாய்ப்பில்லை. லஞ்ச ஒழிப்புத் துறை பரிசோதனையில், அவரது வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்கள் பற்றிய விவரங்களை அவரால் துறை விசாரணையின் போது கண்டிப்பாக விளக்கியிருக்க முடியும். ஆனால், விசாரணை என்ற பெயரில் அவரையும், சம்பந்தமே இல்லாத அவருடைய குடும்பத்தினரையும் வரவழைத்து உண்மைக்கு மாறாக சாட்சியம் பெறுவதே லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நோக்கமாக இருந்தது என்று செய்திகள் வெளிவந்துள்ளன.
எனவே தான் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகச் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சியினரான நாங்களும் சந்தேகிக்கின்றோம் இதே லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட மற்றொரு சோதனையில் பொதுப்பணித் துறை பொறியாளர் வீட்டில் சுமார் 2.1/4 கோடி ரூபாய் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக அத்துறையே செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அவர் பணி நீக்கம் செய்யப்படவில்லை உடனடியாக கைதும் செய்யப்படவில்லை. 10 நாளில் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான நாங்கள் இந்தத் தவறை சுட்டிக் காட்டிய பிறகுதான் அரசு மேல்நடவடிக்கை எடுத்துள்ளது. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம், ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்ததுதான் வரலாறு. தலைமைச் செயலாளராக பணியாற்றிய ராயப்பா, DGP-ஆக பணியாற்றிய துரை மற்றும் அண்ணாநகர் ரமேஷ் மற்றும் அவரது குடும்பம் சாதிக்பாட்ஷா போன்ற மர்ம மரணங்களோடு வெங்கடாஜலம் மரணமும் இணைந்துள்ளது என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
பொறுப்புள்ள எதிர்கட்சியாக நாங்கள் காவல் துறையினரை கேட்டுக் கொள்வதெல்லாம் சட்டப்படி செயல்படுங்கள் நேர்மையாக செயல்படுங்கள் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். அதை விடுத்து, ஆளும் கட்சியினரின் விருப்பங்களுக்கு ஏற்ப வளைந்து நெளிந்து செயல்படாதீர்கள். நேர்மையான அதிகாரிகளை மிரட்டி வாக்குமூலம் பெறுவதைக் கைவிடுங்கள். வெங்கடாசலம் மரணத்தில், மர்மம் இருப்பதாக பொதுமக்கள் சந்தேகப்படுகின்றனர். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR