பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியருக்கு எதிராக வலுக்கும் குரல்கள்: பணியிடை நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்
ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சென்னை: சென்னையில் உள்ள மிக பிரபலமான பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளுடன் தகாத வகையில் நடந்து கொண்ட விவகாரம் இன்று முழுவதும் மிக அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை முதல் சென்னையில் பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கிடையே பேசுபொருளாக இந்த விவகாரம் இருந்து வருகிறது.
சென்னையில் (Chennai) உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் ஒருவர், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு இணைய வழி வகுப்புகளில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த ஆசிரியர் மீது மாணவர்கள் சில மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும், அவர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி தெரிய வந்ததாகவும், இந்த காரணங்களுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து முழு விசாரணையை கோரி 1,000 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து பள்ளி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையில், நிர்வாகம் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. "தவறான நடத்தை தொடர்பான சில கடுமையான குற்றச்சாட்டுகள் உங்களுக்கு எதிராக வந்துள்ளன. மேலும் சமூக ஊடகங்கள் மூலம் இவற்றைப் பற்றி நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ALSO READ: 17 வயது சிறுமியிடம் அத்துமீறியதாக பிரபல நடிகர், கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், PSBB இன் தற்போதைய மற்றும் முன்னர் இப்பள்ளியில் படித்த மாணவர்கள், PSBB பள்ளியின் ஆசிரியருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் மற்றும் தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருந்தனர். மாணவர்களை தகாத முறையில் தொடுவது, மாணவர்களின் உடல் குறித்து கருத்து தெரிவிப்பது, தன்னுடன் மாணவர்களை வெளியே வர சொல்வது, ஆன்லைன் வகுப்பில் மேலாடை இல்லாமல் வருவது, இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்துகொண்டு ஆன்லைன் வகுப்புக்கு வருவது, ஆபாச வலைத்தள இணைப்புகளை தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று ஆசிரியர் மீது பல குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் பயனரும், பி.எஸ்.பி.பியின் முன்னாள் மாணவருமான ஒருவர், அவருக்கு தெரிந்த ஒருவர் இந்த ஆசிரியர் மூலம் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் நிகழ்வை பகிர்ந்துகொண்ட பிறகு இந்த முழு விவகாரமும் துவங்கியது. அதன்பிறகு, பல மாணவர்கள் தங்கள் சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். இதன் மூலம் அந்த ஆசிரியருக்கு எதிராக தகாத நடவடிக்கைக்கான பல குற்றச்சாட்டுகள் பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின.
இதைத் தொடர்ந்து நடிகை லட்சுமீப்ரியா சந்திரமவுளி மற்றும் ஏஜிஎஸ் சினிமாஸின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ச்சனா கல்பதி உள்ளிட்ட பள்ளியின் 1,000 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். அந்த ஆசிரியருக்கு எதிராக கடுமையான நடவைக்கை எடுக்கப்பட வெண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில் காவல் துறையும் அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தியது. ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh Poyyamozhi) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR