புதுச்சேரி சட்டப்பேரவைக்கான புதிய சபாநாயகராக, துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து தேர்வு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. சட்டப் பேரவைத் தலைவர் தேர்தலுக்காக திங்கட்கிழமை சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை செயலாளர் விண்சண்ட் ராயர் அறிவித்திருந்தார். ஆளும் காங்கிரஸ் கூட்டணி சார்பில் சபாநாயகர் தேர்தல் குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவை சபாநாயகர் தேர்வுக்கு நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.


இதனையடுத்து சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயரிடம் 8 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் 12 மணியுடன் முடிவடைந்த நிலையில் அதுவரை எதிர்கட்சிகள் சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. சபாநாயகர் தேர்தலுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கவில்லை எனக்கூறி எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாலன் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.