முதலமைச்சரை பாஜக ஆட்டிப்படைக்கிறது - நாராயணசாமி விமர்சனம்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை பாஜக ஆட்டிப்படைக்கிறது என அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய நாராயணசாமி, “புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் ரூ.10,696 கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டை நாம் உற்றுநோக்கி பார்த்தால், இதில் வளர்ச்சித் திட்டங்கள், கட்டமைப்புகள், தொழிற்சாலைகள் கொண்டு வர எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை. கடந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் எந்தெந்த திட்டங்களை கொண்டு வந்தோமோ அவையே திரும்பவும் சொல்லப்படுகின்றன. கடந்தாண்டு முதலமைச்சர் சொன்ன அம்சங்களும் இதில் வந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு மிக குறைவாக இருக்கிறது. கல்வியை பொறுத்தவரையில் கடந்தாண்டு கொடுத்த திட்டங்களை தவிர புதிதாக ஒன்றும் இல்லை. பள்ளிகள், கல்லூரிகளை மேம்படுத்துவதற்கான நிதி மிகக் குறைவாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் ரங்கசாமி 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் கொடுக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் அறிவிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டபோது, அதனை கிரண்பேடி தடுத்து நிறுத்தினார். இது ஒன்றும் புதிய திட்டமல்ல. சைக்கிள் கொடுக்கும் திட்டத்தையும் நாங்கள் கொண்டுவர முயற்சித்தோம். அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டது. மாணவர்களுக்கு இத்திட்டம் பயன்படும் என்பதால் எதிர்கக்ட்சியாக இருந்தாலும் அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
முதலமைச்சர் அரசின் எந்த உதவிகளையும் பெறாத வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 21 வயது முதல் 55 வயதுவரை இருக்கின்ற குடும்ப பெண்களுக்கு ரூ.1,000 கொடுக்கப்படும் என்று கூறியிருக்கின்றார். இதில் 5 சதவீதம் பேர்தான் பலனடைவார்கள். 95 சதவீதம் பேருக்கு இதனால் பலனில்லை. இந்த திட்டம் முழுக்க முழுக்க மக்களை ஏமாற்றுகின்ற திட்டம்.
மேலும் படிக்க | ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பிரதமரை முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்து ரூ.2 ஆயிரம் கோடி நிதி கொடுக்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து அவருக்கு சாதகமான பதில் எதுவும் வரவில்லை. பாஜகவை சேர்ந்தவர்கள் ஒருபுறம் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள், மற்றொருபுறம் நிதி கொடுப்பதில்லை. ரங்கசாமியை பாஜக ஆட்டிப்படைக்கிறது” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ