ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Orderly System : காவல்துறையில் ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் காவல்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Chithira Rekha | Last Updated : Aug 23, 2022, 01:31 PM IST
  • ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும்
  • தமிழக அரசு, டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • ஓய்வுபெற்றவர்கள் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப்பெற வேண்டும்
ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு title=

காவல்துறையில் பணியாற்றும் மாணிக்கவேல் என்பவர், வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில்  ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த  நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது போன்ற விவகாரங்கள் குறித்து விசாரித்தார் .

டிஜிபி கடந்த வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து  நீதிபதி பாராட்டும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆர்டர்லி ஒழிப்பு முறை குறித்து 1979-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றி, ஆர்டர்லிகளாக உள்ள காவலர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என்றும், அலுவலக உதவியாளர் அல்லது இருப்பிட உதவியாளர் பணிகளை உருவாக்கும்படி தமிழக அரசுக்கு பரிந்துரை வைக்கலாம் எனவும் டிஜிபி-க்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் படிக்க | இன்னும் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது - சென்னை உயர்நீதிமன்றம்

அப்போது அரசு தரப்பில், ஆர்டர்லிகளை பயன்படுத்துவதில்லை எனவும், மேலும் 265 அதிகாரிகள் ஆர்டர்லிகளை திரும்ப அனுப்புவதாக உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர் நடத்திய கூட்டத்தைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும், ஆர்டர்லி ஒழிப்பு முறையில் உயர் நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் எனவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து,  1979-ம் ஆண்டு அரசாணைப்படி ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமெனவும், ஓய்வுபெற்ற அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும் தமிழக அரசு மற்றும் டிஜிபி-க்கு நீதிபதி  உத்தரவிட்டுள்ளார்.

ஆர்டர்லிகள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தால் உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறியவும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்கிற மனுதாரர் மாணிக்கவேலின் கோரிக்கை குறித்து தமிழக அரசை அணுகும்படியும் அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ‘உங்கள் வீட்டு நாயை பராமரிக்க காவலர் வேண்டுமா ?’ - ‘ஆர்டர்லி’ முறைக்கு நீதிபதி சரமாரிக் கேள்வி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News