பேரறிவாளன் விடுதலை - ரியாக்ஷன்ஸ்.!
பேரறிவாளன் விடுதலைக் குறித்து தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் அளித்த கருத்துகள்.!
பேரறிவாளர் விடுதலை ஆனதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள், இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த விடுதலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பின் தலைவர்கள், திரையுலகினர், பிரபலங்கள் அளிக்கும் கருத்துக்களைப் பார்க்கலாம்.!
விடுதலைச் செய்தியை அறிந்ததும் தனது தாயைச் சந்திக்கச் சென்ற பேரறிவாளன், ’நான் நிறைய பேசணும்’ என்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துவிட்டுச் சென்றார்.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!
பின்னர் பேரறிவாளன் தனது குடும்பத்தினரை சந்தித்த போது, அவரை ஆரத்தழுவி அனைவரும் கண்ணீர் மல்க வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, குடும்பத்தினர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
விடுதலைக் குறித்துப் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேசியதாவது, ‘என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ஒரே தடுமாற்றமாக இருக்கிறது. முழுமையாக பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றி சொல்லவே முதலில் வந்தேன்.
இந்த 31 ஆண்டுகாலம் ஒருவர் சிறையில் கழிக்க வேண்டும் என்பதை ஒரு விநாடி சிந்தித்தால் அந்த வலி அனைவருக்கும் புரியும். பேரறிவாளனுக்கு தொடர்ந்து பரோல் அளித்த தமிழக அரசுக்கு நன்றி. இந்தத் தருணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி. இந்த விடுதலைக்காக 31 ஆண்டு காலம் ஒத்துழைப்புக் கொடுத்த, ஆதரவுக் கொடுத்த அனைத்து நண்பர்கள், ஊடகத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளுக்கு நன்றி. " - அற்புதம் அம்மாள்
மேலும் படிக்க | முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் விடுதலை... பேரறிவாளனின் ரியாக்ஷன் என்ன?
தொடர்ந்து பேசிய பேரறிவாளன், ‘எல்லோருக்கும் வணக்கம். ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்’ என்ற குறளைப் போல நல்லவர்கள் வாழ வேண்டும். கெட்டவர்கள் வீழ வேண்டும். எனது 31 ஆண்டுகால சிறைவாழ்க்கையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகத்தில் வாழும் அத்தனை தமிழர்களும் நினைத்தார்கள். தங்களது வீட்டில் உள்ள பிள்ளைப்போல் என்னை நினைத்தனர். அதற்கு எல்லாவற்றிற்கும் மூலக்காரணம் என் அம்மாதான். என் அம்மாவுடைய தியாகம் ; என் அம்மாவுடைய போராட்டம்தான் காரணம். ஆரம்பத்தில் நிறைய அவமானங்களை சந்தித்திருக்கிறார்கள்.
நிறைய புறக்கணிப்புகளை சந்திச்சிருக்காங்க. நிறைய வலிகளை சந்திருச்சிருக்காங்க. அதையெல்லாம் கடந்து 31 ஆண்டுகாலம் இடைவிடாது எனக்காக போராடிருக்காங்க. எனது விடுதலையில் எங்கள் இரண்டு பேருக்கும் ஒரே விஷயம்தான் இருந்தது. அது எங்களிடம் இருந்த உண்மை. எங்க பக்கம் இருந்த நியாயம். அது மட்டும்தான் எங்களுக்கு இவ்வளவுப் பெரிய வலிமையைக் கொடுத்தது. மார்க்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை 4 முறை வாசித்துள்ளேன். அதை படித்தபின் எனது தாயாரை அந்த நாவலுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இதனை இதுவரை என் அம்மாவிடம் சொல்லியதில்லை. ஆனால், இந்த நேரத்தில் சொல்ல வேண்டும்போல் இருக்கிறது. ஏனெனில், இது எங்க அம்மாவுடைய வலிக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அவங்களப்போலவே, எனது அப்பா, இரண்டு சகோதரிகள், அவர்களின் கணவர்கள் என அனைவரும் பக்க பலமாக இருந்தனர். இந்த 31 ஆண்டு கால சட்டப்போராட்டத்தில் ஒவ்வொரு முறை வீழும் போதும் எனது தாயாரைப் பார்க்க அஞ்சுவேன்.
தனிப்பட்ட முறையில் என் அம்மாவின் உழைப்பை உறிஞ்சுகிறேன் என வருந்துவேன். பெற்றோருக்கு வயது அதிகமாகும் நிலையில் அவர்களது வாழ்க்கையை திருடுகிறோமோ என்று எண்ணினேன். எனது தாய், தந்தை உயிரோடு இருக்கும்போதே விடுதலையைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். அது நடந்துவிட்டது. குடும்பத்தைத் தாண்டி என் விடுதலைக்காக எத்தனையோ அமைப்புகள், தலைவர்கள் என பலர் தங்களது சக்திக்கு மீறி தியாகம் செய்திருப்பதை நன்றியுடன் நினைக்கிறேன். வாழ்க்கையின் ஓட்டத்தில் எப்போதெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்களையெல்லாம் சந்தித்து நன்றி தெரிவிப்பேன். மக்களின் ஆதரவும், அரசின் ஆதரவும் பெருமளவு எனது விடுதலைக்காக குவிவதற்கான காரணம், எனது தங்கை செங்கொடியின் உயிர்த்தியாகம்.
பேரறிவாளன் நிரபராதிதான் ; அவரது வாக்குமூலத்தை நான் தவறாக சித்தரித்துவிட்டேன் என தியாகராஜன் ஐ.பி.எஸ் கொடுத்த பேட்டியும், வாக்குமூலமும் எனது வழக்கில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதேபோல், நீதிபதி தாமஸ் அவர்களின் கட்டுரைகளும், பேட்டிகளும் கூட எனது வழக்கில் பெரிய தாக்கத்தை கொடுத்தது. இதெல்லாம் சேர்ந்துதான் என்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது. அதேபோல் நீதிபதி கிருஷ்ணய்யரின் தீர்ப்பு மிக முக்கியமானது என கருதுகிறேன். அவர் எனக்காக பிரதமர்களுக்கெல்லாம் கடிதம் எழுதியிருக்கிறார். இன்னும் எத்தனையோ வழக்கறிஞர்கள் பெரும் உழைப்பை செலுத்தியிருக்கிறார்கள். ஊடக நண்பர்களும் பெறும் மாற்றத்திற்கு உதவினர். எத்தனை பேருக்கு நன்றி சொல்வதென தெரியவில்லை. அத்தனைப் பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.!’ என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இழுத்தடித்தது ஏன் ? - பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி
பேரறிவாளன் விடுதலை எல்லையற்ற மகிழ்ச்சியைத் தருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, விடுதலை செய்யும்படி பரிந்துரை செய்து பல ஆண்டுகள் கடந்தபோதிலும், முந்தைய ஆளுநரும், இன்றைய ஆளுநரும் அந்தக் கோப்பைக் கிடப்பில் போட்டு வைத்து இருந்தது மிகப்பெரிய அநீதி ஆகும். எந்தத் தவறும் செய்யாமல், இந்த இளைஞனுடைய இளமைக்கால வாழ்க்கை, சீர்குலைக்கப்பட்டு விட்டது. 31 ஆண்டுகளாக, இந்த ஏழு பேரும் துன்ப இருளில் வாடி வதங்கி விட்டார்கள். இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது.
இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி.!. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் விடுத்துள்ள ட்விட்டர் பதவில், ‘ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி. உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள். பேரறிவாளனுக்கு 30ஆண்டுகளாக இழைக்கப்பட்ட அநீதி வீழ்த்தப்பட்டது. ஒரு நிரபராதிக்கு எதிரான இந்த அநீதிக்கு காரணமானவர்களுக்குச் சட்டம் என்ன தண்டனை வழங்கப் போகிறது? இத்தகைய கேள்விக்கு இங்கே விடையேதுமில்லை! வாழ்விழந்து பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் மறுவாழ்வுக்கு ஒன்றியஅரசு என்ன போகிறது?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மரண தண்டனையிலிருந்து மீண்டார் ; ஆயுள் சிறைவாசத்திலிருந்தும் நிரந்தர விடுதலை! அற்புதம் அம்மாள், பேரறிவாளன் என்பவை பெயர்கள் அல்ல,மனித உரிமைப் போராட்டத்தின் உலகளாவிய குறியீடுகள்! இந்த விடுதலைக்கு வழிவகுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்.!
சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜி.சுந்தர்ராஜன் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ‘வரலாற்றின் மிக முக்கியமான நாள் இன்று. மே18ஆம் தேதியே பேரறிவாளனுக்கு கிடைத்துள்ள விடுதலை காலத்தின் திசை மாற ஆரம்பித்துள்ளதை காட்டுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுவரும் சந்தித்த துயரத்திற்கு ஒரு சின்ன ஆறுதல்தான் என்றாலும், இந்தியாவின் நீதிபரிபாலன முறை எவ்வளவு சீர்திருத்தங்களை கோருகிறது என்பதை புரிந்து கொள்ள வைத்திருக்கும் முக்கியமான தீர்ப்பு இது. பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை துவக்கமே. மே மாதம் ஈழத்தில் சிந்திய தமிழர்களின் உதிரம் விடுதலையை வென்றெடுக்கும் என்பதற்கான துவக்கமே இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு எழுவரின் விடுதலையை மட்டும் பெற்றுக்கொடுக்கவில்லை. தனக்கு வானளாவிய அதிகாரங்கள் உள்ளன, மக்களிடம் இறையாண்மை பெற்று, சட்டம் இயற்றுகின்ற உரிமை பெற்ற மாநில அரசு, அமைச்சரவையை கூட்டி தீர்மானித்து அனுப்பிய விஷயத்தில் அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த ஆளுநருக்கு நல்வழிகாட்டும் தீர்ப்பும் கூட.!’ என்று கூறியுள்ளார்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பூ வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘தன் மகனுக்காக ஒரு தாயின் போராட்டம் இறுதியில் வெற்றியைக் காண்கிறது. உண்மையிலேயே தன் மகனுக்காக எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் கதை இது.’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது ட்விட்டர் பதிவில், ‘ஒரு தாயின் பாசத்துக்கு கிடைத்த வெற்றி இது’ என்று தெரிவித்துள்ளார்.
‘பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை தமிழக பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் விடுத்துள்ள அறிவிப்பில், ‘ஏழு தமிழர்களின் விடுதலைக்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். ஒட்டுமொத்த தமிழினத்தின் இக்கோரிக்கையை நம் கழகத் தலைவர் அவர்களும் வலியுறுத்தி வருகிறார். ஒரு பாசப் போராட்டத்தை அரசியலாக்காமல் அற்புதம்மாளின் போராட்டத்துக்கு அரசுகள் செவிசாய்க்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்குப் பிணை: கால்நூற்றாண்டு சட்டப்போராட்டத்தின் முக்கிய மைல் கல்-சீமான்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR