முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 4ம் தேதி நடந்த விசாரணையின்போது, நன்னடத்தையுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு என்ன பிரச்சனை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
இன்றைய விசாரணையில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், `மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்குள் வரும் விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் மட்டும் மாநில அரசு முடிவெடுக்கலாம். பேரறிவாளன் வழக்கு சி.பி.ஐ அமைப்பின்கீழ் வருவதால் மாநில அரசு முடிவெடுக்க முடியாது.’ என்று வாதிட்டார்.
மேலும் படிக்க | பேரறிவாளனுக்கு விரைவில் திருமணம்.!
இந்த வாதத்தை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், `பேரறிவாளன் வழக்கில், 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை. கடந்தமுறை வழங்கப்பட்ட இரண்டு வாய்ப்புகள் தொடர்பாக மத்திய அரசின் முடிவு என்ன? இந்திய குற்றவியல் வழக்குகளில் முடிவெடுக்க, குடியரசு தலைவருக்கு தனி அதிகாரம் உள்ளதா? கிரிமினல் வழக்குகளில் மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என மத்திய அரசு கூறுவதுபோல் இருக்கிறது. அமைச்சரவையின் முடிவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள். பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் நேரம் வீணடிக்கப்படுகிறது. 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மன்னிப்புகள் அனைத்தும் அரசியல் அமைப்புக்கு முரணானதா?. ஆளுநருக்காக மாநில அரசுதான் வாதிடவேண்டும் ; மத்திய அரசு வாதிடுவது ஏன்?. எந்த விதியின் கீழ் மாநில அரசுக்காக நீங்கள் (ஒன்றிய அரசு வழக்கறிஞர்) வாதிடுகிறீர்கள்?.’ என்று கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது பேசிய மத்திய அரசு வழக்கறிஞர், ‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தலையிடுவதற்கான அதிகாரம் இருக்கிறதா என்பதே பிரதான கேள்வியாக இருக்கிறது’ என்று வாதிட்டார்.
இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, `பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் வாதிட, எங்களுக்கு உரிமை உள்ளது. மத்திய அரசு இதில் தலையிட்ட பின்னர்தான் குழப்பமே தொடங்கியது’ என்று கூறினார்.
மீண்டும் குறுக்கிட்ட மத்திய வழக்கறிஞர், ‘மாநில அரசின் முடிவு அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக இருக்கும் போது ஆளுநர் குடியரசுத்தலைவரிடம் முறையிடலாம்.’ என்று தெரிவித்தார்.
இதனை மறுத்துப் பேசிய தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ‘பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் பரிசீலனை மட்டுமே தேவை; ஒப்புதல் அல்ல. விடுதலையை பரிசீலிக்க மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு கால அவகாசம் வழங்கியது; ஆனால், யாருக்கு அதிகாரம் உள்ளது? என மத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தை நாடியது. அதுமட்டுமல்லாமல், பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்ததோடு, இதில் முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு அனுப்பியது அரசியல் சாசன பிழை. ஆளுநரே, இவ்விவகாரத்தில் கையெழுத்திட்டு முடிவு எடுத்திருக்கலாம்; ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளோம் எனக்கூறி குடியரசுத் தலைவரையும் இவ்வழக்கின் உள்ளே ஆளுநர் இழுத்து விட்டார்.’ என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர், கட்டுப்பட்டவர்தானே ?.’ என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, ‘பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், மத்திய அரசின் வாதமும் வேறு வேறாக உள்ளது. நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவாக பதிலளிக்கவில்லை’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க | பிரதமர் மாளிகை முற்றுகை: ஹெலிகாப்டரில் தப்பிச்சென்ற ராஜபக்சவின் குடும்பம்
மீண்டும் குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் திவேதி, ‘அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. சிஆர்பிசி சட்டம் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரத்தை வழங்கவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை தமிழகத்தில் நடைபெற்றதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தான் முடிவெடுக்க முடியும். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது என குற்றவியல் நடைமுறை சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை’ என்று கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe